சென்னை, டிச. 22:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் மதி உணவுத் திருவிழாவை திறந்து வைத்து பார்வையிட்டு, பாரம்பரிய உணவு வகைகளை ருசி பார்த்தார்.
உணவுத் திருவிழாவில், 235–க்கும் மேற்பட்ட உணவு வகைகளை உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் பரிமாறும் வகையில் 38 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், 12 அரங்குகளில் காஞ்சிபுரம் 20 வகையான முட்டை மிட்டாய்கள், கன்னியாகுமரி பலதரப்பட்ட சிப்ஸ் வகைகள், பெரம்பலூர் முத்து சோளம், நாமக்கல் புரதச் சத்து நிறைந்த முட்டை உணவுகள், ராமநாதபுரம் பனை மதிப்புக் கூட்டுப் பொருட்கள், நீலகிரி பாரம்பரிய தேநீர், சேலம் மளிகைப் பொருட்கள், சிவகங்கை செட்டிநாட்டுத் தின்பண்டங்கள், 1990களில் (90s Kids) பிரசித்திப் பெற்ற 30 வகையான திருவள்ளூர் தின்பண்டங்கள் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.
விசேஷ பயிற்சி
உணவுத் திருவிழா நடைபெறும் நாட்களில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு உணவு வகைகளின் தரத்தை மேம்படுத்துவது, சுகாதாரமான முறையில் பரிமாறுவது, விற்பனை நுணுக்கங்கள், சந்தைப்படுத்துதலில் உள்ள சவால்களை எவ்வாறு களைவது போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.
அரங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுவினரால் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய, சைவ, அசைவ, சிறு தானிய உணவுப் பொருட்களை ருசி பார்த்து செய்முறை மற்றும் விற்பனை அனுபவம் குறித்து கலந்துரையாடினார். பின்னர் துணை முதலமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:–
24-ந் தேதி வரை திருவிழா நடைபெறும். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களுடைய மாவட்டங்களில் பிரபலமான உணவு வகைகளை சமைத்து விற்பனை செய்ய 50 கடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 70 குழுக்களைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளார்கள். அடுத்த நான்கு நாட்களுக்கு பெசன்ட் நகர் கடற்கரையில் அரசின் சார்பாக இந்த உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அளவிற்கு சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் தாங்கள் தயாரித்த உணவுப் பொருட்களை விற்பனை செய்திருந்தார்கள்.
கடந்த நவம்பர் மாதம் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் 62 இலட்சம் ரூபாய் அளவிற்கு உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இன்று பெசன்ட் நகர் கடற்கரையில் துவக்கி வைத்திருக்கின்றோம். சுத்தமான முறையில் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி பரிசோதிக்கப்பட்டு, உணவுப் பொருட்கள் இங்கே வழங்கப்படுகின்றன.
இவ்வாறு உதயநிதி தெரிவித்தார்.
எம்.எல்.ஏ.ஹசன் மௌலானா
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா, துணை மேயர் மு.மகேஷ்குமார், மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.வி.ஷஜீவனா, திட்ட முதன்மை இயக்க அலுவலர் ஆஷா அஜித், மாநகராட்சி துணை ஆணையர் அஃதாப் ரசூல், மாமன்ற உறுப்பினர் ம.ராதிகா, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
![]()





