செய்திகள்

பெசன்ட் நகர் கடற்கரையில் பெண்கள் உரிமை, பாதுகாப்பு விழிப்புர்ணவு நடைபயணம்

Makkal Kural Official

மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் துவக்கி வைத்தார்

சென்னை, டிச. 14–

பெண்கள் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்திடும் வகையில், பெசன்ட் நகர் கடற்கரையில் அமைக்கப்பட்ட மணல் சிற்பம் மற்றும் விழிப்புணர்வு நடைபயணத்தை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பெண்கள், சிறுமிகள் மற்றும் அனைத்து பாலினங்களும் தன்னம்பிக்கை, மரியாதை மற்றும் பாதுகாப்புடன் நகரத்தில் வாழும் சூழலை உருவாக்குவதில் சென்னை மாநகராட்சி தொடர்ச்சியான பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பாக, மரியாதையுடன் வாழும் நகரத்தை உருவாக்கும் நோக்கில், சென்னை மாநகராட்சி சார்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் “16 நாள் உலகளாவிய பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்” சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உலகளாவிய பாதுகாப்பு இயக்கமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பாதுகாப்பு இயக்கமானது, “அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றுபடுங்கள்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, பெண்ணுரிமை பேணுவோம், பெண்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவோம் என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம் மற்றும் தோழமை அமைப்பு ஆகியவை இணைந்து “16 நாள் உலகளாவிய பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தின்” ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சியின் சார்பில் பெண்கள் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்திடும் வகையில்,பெசன்ட் நகர் கடற்கரையில் அமைக்கப்பட்ட மணல் சிற்பம் மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் நடைபெற்ற விழிப்புணர்வு நடைபயணம் நிகழ்வினை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.வி. ஷஜீவனா, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் புதுக்கோட்டை விஜயா ஆகியோர் தொடங்கி வைத்துப் பார்வையிட்டு இந்நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

பெசன்ட் நகர் கடற்கரையில் உருவாக்கப்பட்ட மணல் சிற்பமானது பெண்கள் பாதுகாப்பு, துன்புறுத்தல் தடுப்பு, டிஜிட்டல் வன்முறையை முடிவுக்கு கொண்டு வருதல் மற்றும் பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் சமம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டது. பின்னர், விழிப்புணர்வு நடைபயணத்தில் சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள், ஆகியோர் பெருமளவில் பங்கேற்று “பெண்ணுரிமை பேணுவோம், பெண்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவோம்” என்ற முழக்கத்துடன் நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், பொதுமக்களுக்கு 181 மற்றும் 1091 என்ற உதவி எண் குறித்த விழிப்புணர்வு, பெண்கள் பாதுகாப்பு சேவைகள், சென்னை மாநகராட்சியின் பாதுகாப்பு நகர முயற்சிகள், துன்புறுத்தல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கலைக்குழுவினரின் தப்பாட்டம், ஒயிலாட்டம், தெரு நாடகம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். பெண்கள், சிறுமிகள் மற்றும் அனைத்து பாலினத்தவர்களுக்கும் பாதுகாப்பு, மரியாதை, டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது இந்த நிகழ்வின் நோக்கமாகும்.

இந்நிகழ்வில் தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல், மாநகராட்சி பாலின மற்றும் கொள்கை ஆய்வக குழுத் தலைவர் லெஜிஸ், தோழமை தொண்டு நிறுவன இயக்குநர் ஏ.தேவனேயன் மற்றும் அலுவலர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *