சென்னை, ஆக.20-
பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் 75 டன் எடை கொண்ட செயற்கைக் கோளை நிலைநிறுத்த 40 மாடி கட்டிடத்தின் உயரத்தைக் கொண்ட ராக்கெட் ஒன்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு இந்தியாவின் விண்வெளி திட்டத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக தெலுங்கானா கவர்னர் ஜிஷ்ணு தேவ் வர்மா, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.
விழாவில் நாராயணன் பேசியதாவது:-
இஸ்ரோ இந்த ஆண்டு வழிசெலுத்துதல் (நேவிக்) பணிக்காக புதிய செயற்கைக்கோள் மற்றும் ‘என்1′ என்ற ராக்கெட் போன்ற திட்டங்களை உருவாக்கி வருகிறது. அத்துடன் இந்திய ராக்கெட்டுகளை பயன்படுத்தி அமெரிக்காவின் 6 ஆயிரத்து 500 கிலோ எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் செலுத்த இருக்கிறது.
17 டன் எடை கொண்ட முதல் ராக்கெட்டை மறைந்த விஞ்ஞானி அப்துல் கலாம் உருவாக்கி யிருந்தார். இது குறைந்த உயரம் கொண்ட புவிவட்டப்பாதையில் 35 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை நிலை நிறுத்தும் திறன் கொண்டதாகும்.
ஆனால் இன்று, பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் 75 டன் எடை கொண்ட செயற்கைக்கோளை நிலைநிறுத்த ஒரு ராக்கெட் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த ராக்கெட் 40 மாடி கட்டிடத்தின் உயரத்தைக் கொண்டதாக இருக்கும்.
அதேபோல், இஸ்ரோ தொழில்நுட்ப செயல்விளக்க செயற்கைக்கோள் (டி.டி.எஸ்.) மற்றும் இந்திய ராணுவ தொடர்பு செயற்கைக்கோளான ஜி.எஸ்.டி. 7ஆர் ஆகியவற்றை இந்த ஆண்டு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஜிசாட்-7 (ருக்மிணி) செயற்கைக் கோளை மாற்று வதற்காக இந்திய கடற்படைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்த்து இந்த ஆண்டு விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.
இந்தியா தற்போது 55 செயற்கைக் கோள்களை சுற்றுப்பாதையில் செலுத்தி உள்ளது. அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 3 மடங்காக அதிகரிக்கப்படும்.
இந்தியா தற்போது இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவிய பெருமை கொண்டுள்ளது. வளர்ந்த நாடுகள் கூட செய்ய முடியாத வகையில், முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் விண்கலத்தை இறக்கி வெற்றி பெற்ற ஒரே நாடும் இந்தியா தான். இன்று, சூரியனைப் படிக்க ஆதித்யா எல்.1 செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளோம். சூரியனைப் படிப்பதற்கான செயற்கைக்கோளை உருவாக்கிய திறன் கொண்ட 4 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
![]()





