சென்னை, செப். 9–
புஸ்ஸி ஆனந்த் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டதற்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வருகிற 13-ந்தேதி தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்க இருக்கிறார். இதற்காக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெறுவதற்காக, கடந்த 6-ந்தேதி கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்தார். அவரை வரவேற்பதற்காக ஏராளமான த.வெ.க. தொண்டர்கள் விமான நிலையத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர் விமான நிலையம் எதிரே உள்ள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது த.வெ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் வந்த வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டு இருந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கார்களை அப்புறப்படுத்தும்படி அறிவுறுத்தினர். இதனால் த.வெ.க.வினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 8 பேர் மீது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகவும், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது, சட்ட விரோதமாக ஒன்று கூடியது உள்பட 4 பிரிவுகளின் கீழ் திருச்சி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பயத்தின் உச்சத்தில்
தி.மு.க. அரசு
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு;
தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மீதும், கட்சித் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ? தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்பது மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது.
தேர்தல் பிரசாரப் பயணம் என்பது, அனைத்துக் கட்சிகளும் மேற்கொள்ளும் ஜனநாயகப்பூர்வமான பிரதான நடவடிக்கைதான். மற்ற கட்சிகளின் இது போன்ற நடவடிக்கைகளைச் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் இந்த வெற்று விளம்பர மாடல் அரசு, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது. தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்து முழு நேரமும் நம்மை வீழ்த்துவதைப் பற்றியே சிந்தித்து, காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள்.
அதன் ஒரு பகுதிதான், திருச்சியில் நமது கட்சி பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் கட்சி தோழர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கு. திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, என்.ஆனந்த் மீதும் கழகத் தோழர்கள் மீதும் பதியப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()





