செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

Makkal Kural Official

425 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படும்

நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட கடும் கட்டுப்பாடு

சென்னையில் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிப்பு

சென்னை, டிச.31-

வரும் புத்தாண்டு விழாவையொட்டி, சென்னையில் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள். நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

2025-ம் ஆண்டு விடைபெற்று இன்று நள்ளிரவு 2026-ம் ஆண்டு பிறக்கிறது. ஆங்கில புத்தாண்டை வரவேற்க மக்கள் ஆர்வமாக உ்ளளனர். தலைநகர் சென்னையில் மெரினா உள்ளிட்ட இடங்களில் மக்கள் திரண்டு புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்பார்கள்.

நட்சத்திர ஓட்டல்களிலும் கொண்டாட்டங்கள் களைகட்டும். இந்த கொண்டாட்டங்களுக்கு சென்னை போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில், எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் அமைதியான முறையில் புத்தாண்டு விழாவை கொண்டாட விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை நகர கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சாலைகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட உள்ளனர்.

புத்தாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு உதவியாக 1,500 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, பரங்கிமலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணா நகர், கொளத்தூர், கோயம்பேடு உள்ளிட்ட 12 போலீஸ் மாவட்டங்களில் 425 இடங்களில் சாலைகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் நடத்தப்படும். 30 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு ‘பைக் ரேஸ்’ நடத்தவிடாமல் தடுப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

100-க்கும் மேற்பட்ட முக்கியமான கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் இதர வழிபாட்டு இடங்களில் அதிக அளவு போலீசார் குவிக்கப்படுவார்கள்.

இன்று மாலை முதல் நாளை (வியாழக்கிழமை) வரை பொதுமக்கள் கடலில் குளிக்கவும், இறங்கி விளையாடவும் அனுமதி மறுக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை, திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் போலீசார் குதிரைப்படைகளில் ரோந்து சுற்றி வருவார்கள்.

நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டையொட்டி நடைபெறும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் போதை நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு விழாவை. இருந்தாலும் நள்ளிரவு 1 மணி வரையில் புத்தாண்டு கொண்டாட வாய்மொழி மூலம் போலீசார் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் இன்று இரவு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 25 மேம்பாலங்களும் இன்று இரவு மூடப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *