செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்

Makkal Kural Official

சென்னை, டிச.26-

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

ஜனவரி 1-ந் தேதி ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. டிசம்பர் 31-ந் தேதி(புதன்கிழமை) நள்ளிரவு ஓட்டல்கள், கடற்கரை, ரிசார்ட்டுகளில் உற்சாகம் களைகட்டும்.

புத்தாண்டுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கடற்கரை ரிசார்ட்டுகள் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு பொறுப்பு டி.ஜி.பி. அறிவுறுத்தி உள்ளார். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் மிக கவனமாக செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். குறிப்பாக கடற்கரை, வழிபாட்டு தலங்களில் கூடுதல் போலீசார் பணி அமர்த்தப்பட உள்ளனர். மெரினா கடற்கரையில் மட்டும் 1,000 போலீசார் நிறுத்தப்பட உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடலில் இறங்கி குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, சென்னை பெசன்ட்நகர், திருவான்மியூர், கோவளம், மாமல்லபுரம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் கடற்கரையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுகின்றனர். இதுதவிர கடற்கரை ஓரத்தில் நீச்சல் வீரர்களும் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

மெரினா போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண்கள் மிக பாதுகாப்பாக இருக்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். குறிப்பாக குழந்தைகளை அழைத்து செல்வதை தவிர்க்க பெற்றோர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

‘பைக் ரேஸ்’ என்ற பெயரில் பந்தயம் கட்டி மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் அதிவேகமாக சென்று, சாகசம் செய்வதை தடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ‘பைக் ரேசில் ஈடுபடுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதோடு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் கடும் நிபந்தனைகளுடன் கூடிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

சாலையின் நடுவே ‘கேக்’ வெட்டுவது, பட்டாசு வெடிப்பது, பெண்களை மடக்கி புத்தாண்டு வாழ்த்து சொல்வது போல அவர்களுடன் கைக்குலுக்கி பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்ற சம்பவங்களில் யாரும் ஈடுபட கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விபத்துகளால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாமல் தடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். புத்தாண்டு தினத்தன்று முக்கியமான சாலைகளின் நடுவே இரும்பு தடுப்புகளை அமைத்து, வாகனங்கள் வேகமாக செல்வதை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

நட்சத்திர ஓட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் கடந்த ஆண்டை போன்று கடும் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளனர். நட்சத்திர ஓட்டல்களில் மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல கூடாது என ஏற்கனவே சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை நிறைவேற்றும் வகையில் நட்சத்திர ஓட்டல்கள் செயல்பட வேண்டும் என்றும், இதை மீறினால் ஓட்டல் நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளனர்.

நட்சத்திர ஓட்டல்களில் ஆபாச நடனங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *