செய்திகள்

புதுப்பாக்கம் ஊராட்சி நாற்றங்கால் பண்ணையில் வளர்க்கப்படும் மரக்கன்றுகள்: கலெக்டர் ஆய்வு

Makkal Kural Official

ராணிப்பேட்டை, டிச.27–

ராணிப்பேட்டை மாவட்டம் புதுப்பாக்கம் ஊராட்சியில் கூடுதல் வட்டார நாற்றங்கால் பண்ணையில் பல்வேறு வகையான மரக் கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளதை கலெக்டர் சந்திரகலா நேரில் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் சந்திரகலா திமிரி ஊராட்சி ஒன்றியம் அகரம் ஊராட்சியில் கலவை மடுவு ஆற்றின் குறுக்கே மாநில சிறப்பு நிதி திட்டத்தில் ரூ.4.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணியை பார்வையிட்டு பணிகள் விரைவாக மேற்கொள்ள கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பென்னகர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பண்ணை குட்டை அமைக்கும் பணிகளையும், முதலமைச்சரின் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தில் ரூ.36 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடப் பணிகள் நடைபெற்று வருவதையும், பிரதம மந்திரி திட்ட வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் ஆய்வு செய்து பனி காலதாமத்திற்கான காரணத்தை கேட்டறிந்தார். பணியை தொடர்ந்து கண்காணித்து விரைவாக முடிக்கவும் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து குப்பிடிச்சாத்தம் ஊராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையம் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து, அருகில் இருந்த சமுதாயக்கூடத்தை பார்வையிட்டு பயன்பாடு இல்லாமல் உள்ளது குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து மாம்பாக்கம் ஊராட்சியில் பண்ணைக்குட்டை அமைக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டு வந்ததை ஆய்வு செய்து பணி காலதாமதத்தை கேட்டறிந்தார். முறையாக கண்காணித்து பணியை முடிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டமைப்பு திட்டத்தில் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் பழைய தொகுப்பு வீடு இடிக்கப்பட்டு புதிய வீடு கட்டப்பட்டு வரும் பயனாளியின் வீட்டை ஆய்வு செய்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து இருங்கூர் ஊராட்சியில் தட்டச்சேரி பகுதியில் 36 இருளர் இன மக்களுக்கு தலா ரூ.5.07 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பினை ஆய்வு செய்து, இப்பொகுதிக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வசதிகள் அமைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள திட்ட இயக்குனர் அவர்களை கேட்டுக்கொண்டார்.

ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் முறையாக கண்காணித்து, ஒவ்வொரு பணியையும் விரைவுப்படுத்தவும் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களை கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வுகளில் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை ந.செ.சரண்யாதேவி, செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசு, சித்ரா, வட்டாட்சியர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *