செய்திகள்

புதுடெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்: அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை

Makkal Kural Official

புதுடெல்லி, ஜன. 12–

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக புதுடெல்லி சிபிஐ அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். அங்கு வைத்து புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா, மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கடந்த நவம்பர் மாதம் விசாரணை நடைபெற்றது.இதைத்தொடர்ந்து அவர்களுக்கு சம்மன் அனுப்பி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்திலும் கடந்த மாதம் 3 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது.

சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஜய்யின் பிரசார வாகனத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே பார்வையிட்டு சென்ற நிலையில், அந்த வாகனத்தை கரூருக்கு வரவழைத்து பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து நேற்று முன்தினம் விசாரணை நடத்தினார்கள். பிரசார வாகன டிரைவரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டன.விசாரணை முடிந்தவுடன் பிரசார வாகனத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் திரும்ப ஒப்படைத்தனர்.

கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் விஜய்யின் பெயர் இல்லை. எனினும் அவரிடமும் விசாரணை நடத்துவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர்.இந்தநிலையில் விசாரணையின் தொடர்ச்சியாக த.வெ.க. தலைவர் விஜயையும் நேரில் அழைத்து விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பியது. இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் காலை 11 மணிக்கு அவர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அவரது வருகை காரணமாக இன்று ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த சம்மனை ஏற்று சிபிஐ முன் ஆஜர் ஆவதற்காக விஜய் இன்று காலை 6 மண்யளவில் தனது பனையூர் வீட்டில் இருந்து டெல்லி புறப்பட்டார். தனி விமானத்தில் விஜய் டெல்லி சென்றார். காலை 10.30 மணியளவில் விஜய், டெல்லி சென்றடைந்தார். டெல்லி விமானநிலையத்தில் இருந்து 20 கி.மீ. விஜய் காரில் பயணம் செய்து சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் கரூர் சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

கூட்டம் நடத்தும் நாள் மற்றும் இடத்தை இறுதி செய்தது யார்? பிரச்சாரத்திற்கு தாமதமாக சென்றடைந்ததற்கான காரணம் என்ன? கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்தியது தெரியுமா? குறுகலான இடத்தில் எத்தனை பேர் கூடுவார்கள் என்று தெரியுமா? அதிகளவில் கூட்டம் கூடியது குறித்து காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டதா? பெருங்கூட்டத்திற்கு மத்தியில் விஜய் வாகனம் ஊர்ந்துசெல்ல அனுமதிக்கப்பட்டது எப்படி? காயமடைந்தவர்கள் பற்றி உடனடியாக தகவல் கிடைத்ததா? திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ன? அந்த மரணத்திற்கு யார் பொறுப்பு? என்பது போன்ற 80-க்கும் மேற்பட்ட கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் விஜயிடம் முன்வைத்து, கிடுக்குபிடி விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசாரணை 3 நாட்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விசாரணை முடிந்த பிறகு, சிபிஐ தனது இறுதிக் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் என்று கூறப்படுகிறது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *