நாட்டில் முதல் முறையாக 800 சதுர அடியில் இலவச மனைப்பட்டா வழங்கினார்
புதுவை, ஜூலை 28–
நாட்டில் முதல் முறையாக புதுச்சேரியில் 800 சதுர அடியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச மனைப்பட்டாவை முதலமைச்சர் என்.ரங்கசாமி இன்று வழங்கினார். அப்போது மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.
பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த 2023–ம் ஆண்டு செப்டம்பர் முதல் 1 கோடியே 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கு மாதம் ரூ.1,000 நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இதேபோல புதுச்சேரியில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் இருக்கும் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என சட்டசபை கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். அதன்படி, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மகளிருக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச மனை பட்டா வழங்கும் விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்றார். இதுவரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 600 சதுரடி அளவில்தான் இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டு வந்தது. இதை உயர்த்தி 800 சதுர அடி அளவில் நாட்டில் முதல் முறையாக இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது. புதுவை சபாநாயகர் ஆர். செல்வம் தொகுதியான மணவெளி தொகுதியில் 236 பேருக்கு இப்பட்டா வழங்கப்பட்டது. மேலும் இந்த மக்கள் வீடு கட்டிக் கொள்ள நிதியுதவி ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தியும் முதல்வர் என்.ரங்கசாமி வழங்கினார்.
வரவிருக்கும்
தேர்தலையொட்டி
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 ரூபாய் உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். தற்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2026ம் ஆண்டு புதுச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தான் முதலமைச்சர் ரங்கசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் ஆர். செல்வம், எம்.எல்.ஏ,க்கள் ஆர்.செந்தில்குமார், கே.எஸ்.பி. ரமேஷ், அரசு ஆணையர் மற்றும் செயலர் டாக்டர் ஏ. முத்தம்மா, துறையின் இயக்குநர் ஏ. இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
![]()





