வாஷிங்டன், செப்.21–
எச்–1பி விசாவுக்கான கட்டணம் ஒருமுறை மட்டுமே செலுத்தக் கூடிய கட்டணம் என்று அமெரிக்கா விவரித்துள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த எச்–1 பி விசா கட்டண உயர்வு (ஓராண்டு கட்டணம் ரூ.88 லட்சம்) இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த கட்டண உயர்வு பற்றி பல்வேறு சந்தேகங்கள், முரண்பாடான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தற்போது இந்த விசாவை வைத்திருக்கும் யாருக்கும் பாதிப்பு இல்லை. இந்த கட்டண உயர்வு என்பது புதிய விசா கோரும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே என்று அமெரிக்கா தெளிவுபடுத்தி உள்ளது.
அமெரிக்காவில் எச்1பி விசாவின் புதிய கட்டண அறிவிப்புக்கு அமெரிக்க நிறுவனங்களே பெரிதும் பாதிக்கப்படும் என்ற நிலையில், விசா கட்டணம் குறித்த விளக்கத்தை வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:–
எச்1பி விசா கட்டணமானது, வருடாந்திர கட்டணம் அல்ல. இது ஒருமுறை விண்ணப்பக் கட்டணம் மட்டுமே. ஏற்கெனவே எச்1பி விசா வைத்திருப்பவர்களும், தற்போது நாட்டுக்கு வெளியே இருப்பவர்களும் மீண்டும் நுழைய ஒரு லட்சம் டாலர் வசூலிக்கப்பட மாட்டாது. எச்1பி விசா வைத்திருப்பவர்கள், எப்போதும்போல நாட்டைவிட்டு வெளியேறி மீண்டும் நுழையலாம். நேற்றைய அறிவிப்பால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. புதிய கட்டண அறிவிப்பு, புதிதாக விசா விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே என்று விளக்கம் அளித்துள்ளது.
எச்–1பி விசா என்பது ஒரு குடியுரிமை வழங்கப்படாத விசா முறையாகும். இது அமெரிக்காவில் உள்ள பெரு நிறுவனங்கள், வெளிநாட்டு ஊழியர்களை மிகவும் சிறப்பு வாய்ந்த பணிகளில் பணியமர்த்த அனுமதிக்கிறது.
இந்த நிலையில்தான் அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு எச்1பி விசாவில் புதிய மாற்றத்தை அறிவித்தது. அதன்படி எச்1பி விசா கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக உயர்த்தி அறிவித்தது. முன்னதாக ஒரு லட்சம் ரூபாயாக இருந்த விசா கட்டணம், தற்போது சுமார் 88 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், எச்1பி விசாவில் பணியாற்றும் தங்களது ஊழியர்களை அமெரிக்காவிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்திய நிலையில், வெள்ளை மாளிகை விளக்கமாக விவரித்துள்ளது.
இந்திய தூதரகம் அறிவிப்பு
இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. கட்டண உயர்வு மற்றும் அதுதொடர்பாக அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு உதவும் வகையில் அவசர தொலைபேசி உதவி எண்களை அறிவித்துள்ளது. இந்த விபரத்தை இந்திய தூதரகம் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:–அவசர உதவி தேவைப்படும் இந்தியர்கள் +1–202–550–9931 என்ற செல்போன் எண்ணை மற்றும் வாட்ஸ் அப்பில் அழைக்கலாம். உடனடி அவசர உதவி தேவைப்படும் இந்தியர்கள் மட்டுமே இந்த எண்ணைப் பயன்படுத்த வேண்டும், வழக்கமான தூதரக விசாரணைகளுக்கு அழைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளது.
முன்னதாக அமெரிக்கா திரும்பும் இந்தியர்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அனைத்து தூதரகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா திரும்புகிறார்கள்
இதனிடையே இன்று முதல் விசா கட்டண உயர்வு அமலுக்கு வருவதால், தாய்நாட்டுக்கு சென்றுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரும் 24 மணி நேரத்தில் அமெரிக்கா திரும்ப வேண்டும். தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ள ஊழியர்கள் சொந்த நாட்டுக்கு செல்ல வேண்டாம் என்று மெட்டா, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன. இதுதொடர்பாக அந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு இ–மெயில் மூலம் தகவல் அனுப்பி உள்ளன. இதனால், இந்தியா உட்பட தாய்நாடுகளுக்கு சென்றுள்ள ஐ.டி. ஊழியர்கள் அனைவரும் உடனடியாக அமெரிக்கா திரும்பி வருகின்றனர்.
அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய மென்பொருள் பணியாளர்கள் பலரும் நவராத்திரியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர். இந்த சூழலில், திடீரென எச்1பி விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், அவர்கள் உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக டெல்லி, மும்பை, அகமதாபாத், கொல்கத்தா உட்பட நாடு முழுவதும் விமான நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதன் எதிர்விளைவாக விமான கட்டணமும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு எச்1பி விசா பெற 7.80 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 7.59 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்கப்பட்டன. குலுக்கல் அடிப்படையில் 85,000 எச்1பி விசாக்கள் வழங்கப்பட்டன. இந்த விசாவை பெறுபவர்களில் சுமார் 71–75 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக எச்1பி விசா அறிவிப்பால், இந்திய தொழில்நுட்பத் துறையினர் மட்டுமின்றி அமெரிக்காவுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.அமெரிக்காவில் எச்1பி விசா வைத்திருக்கும் தொழிலாளர்களில் 71 சதவிகிதத்தினர் (2 லட்சத்து 83 ஆயிரத்து 397) இந்தியர்களே. அக்டோபர் 2024 – செப்டம்பர் 2025 வரையிலான காலகட்டத்தில், டிசிஎஸ் நிறுவனம் மட்டும் 5,500-க்கும் மேற்பட்ட எச்1பி விசாக்களை வழங்கியது. அதனைத் தொடர்ந்து காக்னிசன்ட் –3,700, இன்போசிஸ் – 2,004, எல்டிஐ மைன்ட் ட்ரீ – 1,807, எச்.சி.எல். டெக் – 1,728 விசாக்களையும் வழங்கியுள்ளன..அமெரிக்காவுக்கான தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதியால், இந்தியாவுக்கு சுமார் 100 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கிறது. மேலும், புதிய கட்டண அறிவிப்பால் அமெரிக்காவின் வருவாயிலும் பாதிப்பு ஏற்படலாம்.
![]()





