வாஷிங்டன், ஆக. 15–
இந்தியா மீதான வரி விதிப்பே ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பேச்சுவார்த்தைக்கு முன்வரக் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு 25 சதவிகிதம் வரி விதித்திருந்த டிரம்ப், ரஷியாவுடன் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காக கூடுதலாக 25 சதவிகிதம் என மொத்தம் 50 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டது.இதனால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ரூ.3.50 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இதையடுத்து ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை குறைப்பது குறித்த பேச்சுகள் எழுந்தன. இருப்பினும், நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்திய எண்ணெய் கழகத்தின் தலைவர், ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவோம் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினை அலாஸ்காவில் சந்தித்து பேச உள்ளார். அப்போது 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் வலியுறுத்த இருக்கிறார்.
பாக்ஸ் செய்தி நிறுவனத்துக்கு டிரம்ப் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:–
எல்லாவற்றுக்கு ஒரு எதிர்வினை இருப்பதாக நான் நினைக்கிறேன். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்வதால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதனால் ரஷியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகம் அடிப்படையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது. சீனா, இந்தியா என இரண்டு மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இவர்களை இழக்கும் நிலை ஏற்பட்டதால், ரஷியாவிடம் இருந்து அழைப்பு வந்தது. பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்வந்தனர்.
நான் 6 மாதங்களுக்குள் 6 போர்களைத் தீர்த்துவிட்டேன். இந்தியா–பாகிஸ்தான் போரின் போது 6 முதல் 7 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அவை அணு ஆயுதம் ஏந்தத் தயாராக இருந்தன. நாங்கள் அதைத் தீர்த்தோம். போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா தயாராக உள்ளது.
சமாதானம் செய்ய ரஷ்ய அதிபர் புதின் தயாராக இருக்கிறார். அதேபோல், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சமாதானம் செய்வார் என்று நான் நினைக்கிறேன். அலாஸ்காவில் புதினுடனான ஒரு முக்கியமான சந்திப்பு நடக்க உள்ளது என்றார்.
![]()





