செய்திகள்

பீகார் தேர்தல் கருத்துக்கணிப்பு: பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கிறது

Makkal Kural Official

பாட்னா, நவ.5-

பீகாரில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் 6 மற்றும் 11-ந்தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதன்படி 121 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இந்த தேர்தலில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜனதா அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், ராஷ்டீரிய ஜனதா, காங்கிரஸ், இடதுசாரிகளை உள்ளடக்கிய மகா கூட்டணி ஆட்சியை கைப்பற்றவும் கோதாவில் உள்ளன.

இதுதவிர தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சியும் களத்தில் உள்ளது. முதல் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில், பீகாரில் மகுடம் சூடப்போவது யார் என்பது தொடர்பாக தேர்தலுக்கு முந்தைய பரபரப்பு கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன.

இதன்படி பீகாரில் போல்ஸ்ட்ரேட் நிறுவனம் 8 லட்சத்து 42 ஆயிரம் பேரிடம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அருதிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்து உள்ளது. அதாவது தேசிய ஜனநாயக கூட்டணி 133 முதல் 142 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் குறிப்பாக பா.ஜ.க.வுக்கு மட்டும் 70 முதல் 72 தொகுதிகள் கிடைக்கும் என்றும், முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 53 முதல் 56 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் 10 முதல் 12 இடங்களில் வெற்றி பெறலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய மகா கூட்டணிக்கு 80 முதல் 88 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்று போல்ஸ்ட்ரேட் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. இதில் ராஷ்டீரிய ஜனதா தளம் 70 முதல் 72 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 10 முதல் 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெறலாம் என கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கு 18 முதல் 25 தொகுதிகள் கிடைக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல சாணக்கியா ஸ்ட்ரடெஜிஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில், தேசிய ஜனநாயக கூட்டணி 128 முதல் 134 தொகுதிகளில் வெற்றி வாகை சூடும் எனவும், மகா கூட்டணிக்கு 102 முதல் 108 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல மேட்ரைஸ்-அயன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவில், தேசிய ஜனநாயக கூட்டணி 153 முதல் 164 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *