செய்திகள்

பீகார் தேர்தல்: இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்

Makkal Kural Official

பாட்னா, அக். 23–

பீகார் சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

பீகார் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 11ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவான வாக்குகள் 14ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.

ஆளும் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க. கூட்டணி அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிவடைந்தது.

ஆனால் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கும், காங்கிரசுக்கும் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்த நிலையில், சில தொகுதிகளில் 2 கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. மகாகத்பந்தன் கூட்டணிக்குள் (இந்தியா கூட்டணி) நிலவி வந்த சில சிக்கல்கள் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் அசோக் கெலாட், கிருஷ்ணா அல்லவாரு உள்ளிட்டோர் தேஜஸ்வி மற்றும் லாலு பிரசாத் யாதவை சந்தித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் அசோக் கெலாட், விஐபி கட்சியின் தலைவர் முகேஷ் சஹானி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ், துணை முதல்வர் வேட்பாளராக வி.ஐ.பி. கட்சியின் சஹானி இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அசோக் கெலாட் கூறுகையில், மகாராஷ்டிராவில் ஷிண்டே தலைமையில் தேர்தலை நடத்திவிட்டு, பின்னர் வேறொருவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகையால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அமித்ஷாவிடம் கேட்க விரும்புகிறோம் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுடன் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது:–

“நாங்கள் அரசாங்கத்தை அமைக்கவோ அல்லது முதல்வராகவோ மட்டும் விரும்பவில்லை, பீகாரை உருவாக்க விரும்புகிறோம். என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி. உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடிந்த அனைத்தையும் செய்வேன். 20 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அரசாங்கத்தை நாங்கள் ஒன்றிணைந்து கவிழ்ப்போம் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். நாங்கள் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதீஷ்குமாருக்கு அநீதி இழைக்கப்படுகிறது. ஒரு கூட்டுச் செய்தியாளர்கள் சந்திப்புக் கூட நடத்தப்படவில்லை. அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்பதற்கு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பா.ஜ.க.வினர் நிதீஷ்குமாரை முதல்வராக்க மாட்டார்கள் என்பதை தொடக்கத்திலிருந்தே கூறி வருகிறோம். தேர்தலுக்குப் பிறகு ஐக்கிய ஜனதா தளத்தை அழித்துவிடுவார்கள். கட்சி இல்லாமல் போய்விடும்” எனத் தெரிவித்தார்.

அதே நேரத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

லாலுவின் இளைய மகனான தேஜஸ்வி (35). நிதிஷ் குமாருடன் கூட்டணி ஆட்சி நடத்தியபோது, துணை முதல்வராகவும் பதவி வகித்தார். இவர் 2015ல் முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். தொடர்ந்து 2020ல் 2வது முறையாக எம்எல்ஏ. ஆக தேர்வு செய்யப்பட்டு எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார்.

லாலு மீதான ஊழல் வழக்குகளில் தேஜஸ்வியும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *