புதுடெல்லி, அக்.7-
பீகார் சட்டசபைக்கு நவம்பர் 6, 11-ந் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதில் பல லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனை எதிர்க்கட்சிகள் பெரிய விஷயமாக்கி போராட்டங்கள் நடத்தின. நாடாளுமன்றத்திலும் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தநிலையில் பீகார் மாநில சட்டசபைக்கான தேர்தல் நேற்று அறிவிக்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற தேர்தல் அறிவிப்பு நிகழ்ச்சியில் தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர்சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோரது முன்னிலையில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் அறிவித்தார்.
பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு பதற்றமான இடங்கள் பல இருப்பதால் தேர்தல் 2 கட்டமாக நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதன்படி முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ந் தேதியும், 2-ம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு 11-ந் தேதியும் தேர்தல் நடக்கிறது.
முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 10-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரை நடக்கிறது. 18-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு 20-ந் தேதி கடைசி நாள் ஆகும். அடுத்த மாதம் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
2-ம் கட்ட தேர்தலுக்கு வருகிற 13-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
20-ந் தேதி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. 21-ந் தேதி பரிசீலனை நடக்கிறது. 23-ந் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெறுவதற்கு கடைசி நாள் ஆகும். அடுத்த மாதம் 11-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
2 கட்ட தேர்தல்களுக்கும் வாக்கு எண்ணிக்கை ஒரே நாளில் அதாவது அடுத்த மாதம் 14-ந் தேதி நடக்கிறது.
பீகார் மாநிலத்தில் 38 மாவட்டங்களும், 243 சட்டசபை தொகுதிகளும், 40 நாடாளுமன்ற தொகுதிகளும் உள்ளன. இந்த சட்டசபை தேர்தலுக்காக 243 தேர்தல் பதிவு அதிகாரிகளும், 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
90 ஆயிரத்து 712 வாக்குச்சாவடிகள் இருப்பதால் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு இருக்கிறார். சராசரியாக 818 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
வாக்காளர்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை பீகாரில் மொத்தம் 7 கோடியே 43 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் ஆண்கள் 3 கோடியே 92 லட்சம். பெண்கள் 3½ கோடி. 3-ம் பாலினத்தவர் 1,725 பேர். மாற்றுத்திறனாளிகள் 7 லட்சத்து 20 ஆயிரம் பேர். மூத்த குடிமக்கள் சுமார் 4 லட்சம் பேர் உள்ளனர்.
100 வயது வாக்காளர்கள் 14 ஆயிரம் பேர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பீகார் மாநிலத்தில் 14 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர்.
20 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்ட இளம் வாக்காளர்கள் ஒரு கோடியே 63 லட்சம் பேர் உள்ளனர்.
தேர்தல் பணிக்காக 4½ லட்சம் வாக்குப்பதிவு அதிகாரிகள், 2½ லட்சம் போலீசார் உள்பட 8½ லட்சம் பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் தவிர 243 பொது பார்வையாளர்கள், 38 போலீஸ் பார்வையாளர்கள், 67 செலவினப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 38 தொகுதிகள் தாழ்த்தப்பட்டோருக்காகவும், 2 தொகுதிகள் பழங்குடியினருக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
இடைத்தேர்தல்
பீகார் மாநில பொதுத்தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், ஜார்கண்ட், தெலுங்கானா, பஞ்சாப், மிசோரம் மற்றும் ஒடிசா ஆகிய 7 மாநிலங்களில் காலியாக உள்ள 8 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்த 8 தொகுதிகளுக்கும் பீகார் மாநில 2-ம் கட்ட தேர்தலையொட்டி நவம்பர் 11-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கை 14-ந் தேதி நடைபெறுகிறது.
![]()





