பாட்னா, நவ.11-
பீகார் சட்டசபையில் 122 தொகுதிகளுக்கான 2–ம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி …. சதவீத வாக்குகள் பதிவானது.
இன்று வாக்குப்பதிவு முடிந்ததும், முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல்களில் பதிவான வாக்குகள் 14-ந் தேதி எண்ணப்படுகிறது. ஆட்சியை பிடிப்பது எந்த கூட்டணி என்று அப்போது தெரிய வரும்.
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கிறது. இவர்களது ஆட்சி காலம் முடிவடைய உள்ள நிலையில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்த அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக 121 தொகுதிகளில் கடந்த 6-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில் மீதி உள்ள 122 சட்டசபை தொகுதிகளில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது. மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. காலை 9 மணி நிலவரப்படி 14.55 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இதேபோல 11 மணிக்கு 31.3 சதவீத வாக்குகளும், 1 மணி நிலவரப்படி …. சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க., எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி புது போட்டியாளராக தேர்தல் களத்தில் குதித்துள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமார் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மஹாகட்பந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முஸ்லிம்கள் அதிகமுள்ள
தொகுதிகளில்…
முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமுள்ள சம்பாரண் மேற்கு, கிழக்கு, சீதாமர்ஹி, மதுபனி, சுபவுல், அராரியா உள்ளிட்ட இடங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடந்தது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
ஆளும் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான பிஜேந்திர பிரசாத் யாதவ் –சுபவுல் தொகுதியிலும்; பா.ஜ.க. அமைச்சர்களான பாபிரேம் குமார் – கயா டவுன்; ரேணு தேவி – பெட்டியா, நீரஜ் குமார் சிங் – சத்தாபூர் தொகுதியிலும் தேர்தலை சந்திக்கின்றனர்.
20 மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளில் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். லாரியா, சன்பதியா, ரக்சால், திரிவேணிகஞ்ச், சுகவுலி, பன்மகி ஆகிய தொகுதிகளில் தலா 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
2ம் கட்ட தேர்தலில் 3 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்று இருக்கின்றனர். இதில், 30 – 60 வயதுக்குட்பட்டோரின் எண்ணிக்கை, 2.28 கோடி; 18 – 19 வயதுக்குட்பட்டோரின் எண்ணிக்கை 7.69 லட்சம் ஆகும். தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த சுமார் 4 லட்சம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றனர்.
மோடி அழைப்பு
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ‘பீகார் சட்டசபை தேர்தலில் இன்று 2வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று, பதிவான வாக்குகளின் எண்ணிக்கையில் புதிய சாதனையைப் படைக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
குறிப்பாக முதல் முறையாக வாக்களிக்கும் எனது இளம் நண்பர்கள் தாங்கள் வாக்களிப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒடிசா மாநில
இடைத்தேர்தல்
பீகார் சட்டசபை தேர்தலுடன் ஒடிசா மாநிலம் நுவபடா சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடக்கிறது. பிஜு ஜனதாதளம் எம்.எல்.ஏ. ராஜேந்திர டோலகியா மரணம் அடைந்ததால் இடைத்தேர்தல் நடக்கிறது.
இதேபோல ஜார்கண்ட் மாநிலம் காட்சிலா சட்டசபை தொகுதி, காஷ்மீரின் ஜம்மு பகுதியில் உள்ள நக்ரோடா சட்டசபை தொகுதி உள்ளிட்ட 8 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.
![]()





