பாட்னா, ஜூலை 17–
பீகாரில் குடியிருப்புகளுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் 125 யூனிட் இலவச மின்சார வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் இன்று அறிவித்துள்ளார். இது வரவிருக்கும் தேர்தலுக்கு மக்களை மயக்கும் செயல் என எதிர்கட்சியினர் குறை கூறியுள்ளனர்.
பீகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–
ஆரம்பத்தில் இருந்தே பீகாரில் அனைவருக்கும் மலிவு விலையில் மின்சாரம் வழங்கி வருகிறோம். தற்போது ஆகஸ்ட் 1, 2025 முதல், அதாவது ஜூலை மாதக் கட்டணத்தில் இருந்தே, அனைத்து நுகர்வோருக்கும் 125 யூனிட்கள் வரை மின்சாரம் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம். இதன்மூலம் 1.67 கோடி பீகார் குடும்பங்கள் பயனடைவார்கள். அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து வீடுகள் அல்லது அருகிலுள்ள பொது இடங்களில் சூரிய மின் வசதி நிறுவ முடிவெடுத்துள்ளோம்.ஏழை குடும்பங்களின் வீடுகளில் சூரிய மின்சார வசதி அமைக்க முழு செலவையும் மாநில அரசு ஏற்கும், மீதமுள்ளவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு குதிர் ஜோதி யோஜனா மானியம் வழங்கப்படும். இது மின் நெருக்கடியைக் குறைக்க உதவும். அனைத்து மக்களும் எளிய மின்சாரம் பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அடுத்த 3 ஆண்டுகளில் மாநிலத்தின் சூரிய மின்சார உற்பத்தி 10,000 மெகாவாட் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
சில நாள்களுக்கு முன்னதாக, அரசுத்துறை வேலைவாய்ப்பில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 35 சதவீத இடஒதுக்கீடு என்பது பீகாரில் நிரந்தரமாக வசித்து வருபவா்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதெல்லாம் வரவிருக்கும் தேர்தலுக்கு மக்களை மயக்கும் செயல் என எதிர்கட்சியான ராஷ்ட்டிரிய ஜனதா தள கட்சி நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
![]()





