செய்திகள்

பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கக்கோரி 2 லட்சம் பேர் மனு

Makkal Kural Official

புதுடெல்லி, ஆக.31-

பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து தங்களது பெயரை நீக்கக்கோரி சுமார் 2 லட்சம் பேர் மனுக்களை அளித்துள்ளனர் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

பீகாரில் நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை செய்தது. இதில் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் என 65 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.

இதையடுத்து கடந்த 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஆட்சேபம் தெரிவிக்கவோ, திருத்தம் மேற்கொள்வோ செப்டம்பர் 1-ந் தேதி வரை (அதாவது நாளை வரை) கால அவகாசத்தையும் தேர்தல் கமிஷன் தெரிவித்து இருந்தது.

இதனிடையே இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க ஆதார் அட்டை உள்ளிட்ட பட்டியலிடப் பட்ட 11 ஆவணங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது. இந்த நிலையில் தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பீகார் மாநிலத்தின் 7.24 கோடி வாக்காளர்களில் 99.11 சதவீதம் பேர் இதுவரை தங்கள் ஆவணங்களை சரிபார்ப்புக்காக சமர்ப்பித்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 98 ஆயிரம் பேர் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு மனுக்களை அளித்துள்ளனர்.

அதேபோல் 30 ஆயிரம் பேர் தங்களது பெயர்களை சேர்க்குமாறு விண்ணப்பித்துள்ளனர். அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் இதுவரை வரைவு பட்டியலில் சேர்க்க 25 கோரிக்கைகளையும், விலக்க 103 கோரிக்கைகளையும் தாக்கல் செய்துள்ளனர்.

அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிற 30-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

தேர்தல் நடைபெற உள்ள பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்வதில் சுப்ரீம் கோர்ட்டு நம்பிக்கை வைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *