செய்திகள்

பீகாரில் முதல்கட்ட சட்டசபை தேர்தல்: 121 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு

Makkal Kural Official

பாட்னா, நவ.6–

பீகார் சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. பகல் 1 மணி நிலவரப்படி 42.3% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

வாக்குச் சாவடிகளில் வரிசையில் நின்று மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், இந்தியா கூட்டணி முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அவருடன் அவரது மனைவி ராஜ்ஸ்ரீ யாதவ், முன்னாள் பீகார் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், அவருடைய மனைவி ராப்ரி தேவி ஆகியோரும் தங்கள் வாக்கைச் செலுத்தினர்.

வாக்களித்த பின்னர் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது:–

பீகார் மக்கள் தங்கள் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் மனதில் கொண்டு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். வேலைவாய்ப்பு, கல்வி, நல்ல சுகாதார சேவைக்காக வாக்களியுங்கள். நாங்கள் வெற்றி பெறப் போகிறோம், பீகார் வெற்றி பெறப் போகிறது. நவம்பர் 14ம் தேதி ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்படும். மாற்றம் ஏற்படும். புதிய அரசாங்கத்தை அமைக்க மாற்றத்தை கொண்டு வாருங்கள் என்று கூறினார். பக்தியார்பூரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் வாக்களித்தார். மத்திய அமைச்சர்கள் நித்யானந்த் ராய், சிராக் பாஸ்வான், பா.ஜ.க. எம்.பி. ரவி சங்கர் பிரசாத், காங்கிரஸ் தலைவர் கன்னையா குமார் உள்ளிட்டோர் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.

துணை முதலமைச்சரும், தாராபூர் பா.ஜ.க. வேட்பாளருமான சாம்ராட் சவுத்ரி தாராபூர் முங்கரிலும், விஜய்குமார் சின்ஹா லக்கிசாரை தொகுதியில் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

பீகாரில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு இன்றும், 11–ந்தேதியும் என இருகட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க., எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, புது போட்டியாளராக தேர்தல் களத்தில் குதித்துள்ளது.

இந்த தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமார் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மஹாகட்பந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக பரபரப்பாக நடந்த தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

7 கோடியே 24 லட்சம்

வாக்காளர்கள்….

முதல் கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

மொத்தமுள்ள 7 கோடியே 24 லட்சம் வாக்காளர்களில் 3 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் முதற்கட்ட தேர்தலில் வாக்களிக்கின்றனர். 10 லட்சத்து 72 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள். அவர்களில் 7 லட்சத்து 38 ஆயிரம் பேர் 18 மற்றும் 19 வயதானவர்கள் ஆவர். தலைநகர் பாட்னாவில் உள்ள திகா சட்டசபை தொகுதியில் அதிகபட்சமாக 4.58 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஷேகுபுரா மாவட்டத்தின் பர்பிகா தொகுதியில் குறைந்தபட்சமாக 2.32 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

முதல்கட்டத் தேர்தலில் இந்தியா கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் (ரகோபூர் தொகுதி), மற்றும் மாநில துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா, 10-க்கும் மேற்பட்ட பாஜக மற்றும் அமைச்சர்கள் உள்பட 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

நாட்டுப்புற பாடகி

மைதிலி தாக்கூர்

இளம் நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் (பாஜக–அலிகஞ்ச் தொகுதி) மற்றும் போஜ்புரி சூப்பர் ஸ்டார்கள் கேசரி லால் யாதவ் (ஆர்ஜேடி– சாப்ரா தொகுதி) மற்றும் ரித்தேஷ் பாண்டே (ஜன் சுராஜ் கட்சி – கர்கஹார் தொகுதி) ஆகியோரும் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.

இந்த தேர்தலில் 122 பெண் வேட்பாளர்களும், ஒரு திருநங்கை வேட்பாளரும் அடங்குவர். அதிகபட்சமாக குர்ஹானி, முசாபர்பூர் ஆகிய தொகுதிகளில் தலா 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மொத்தம் 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் கிராமப்புற பகுதிகளில் அமைந்துள்ளன.இந்த நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 13.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக சஹார்சா தொகுதியில் 15.27 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக லக்கிசரா தொகுதியில் 7 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன. பகல் 11 மணி வரை 27.7% வாக்குகள் பதிவானது.

மாலை 5 மணி வரை அனுமதி

மாலை 5 மணிக்கு வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. முதல்கட்ட தேர்தலையொட்டி, பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 1,650 கம்பெனி பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வாக்குச்சாவடிகள் மற்றும் அவற்றை சுற்றிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக வரும் 11ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 14ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

உற்சாகத்துடன் வாக்களியுங்கள்:

பிரதமர் மோடி டுவிட்

இந்த நிலையில் முழு உற்சாகத்துடன் வாக்களியுங்கள் என்று பீகார் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- பீகாரில் இன்று ஜனநாயக கொண்டாட்டத்தின் முதல் கட்டம். இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ள அனைத்து வாக்காளர்களும் முழு உற்சாகத்துடன் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்தில் முதல் முறையாக வாக்களிக்கும் எனது இளம் நண்பர்கள் அனைவருக்கும் எனது சிறப்பு வாழ்த்துகள். நினைவில் கொள்ளுங்கள், முதலில் வாக்களியுங்கள், பின்னர் உணவுகளை எடுத்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

வாக்குரிமையைப்

பயன்படுத்துங்கள்

பீகார் வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இது குறித்து சமூகவலைதளத்தில் தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–

ஜனநாயக திருவிழாவிற்கு பீகார் தயாராக உள்ளது. வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும். வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் வரவேற்கப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பீகார் வாக்காளர்கள், எனது சகோதர சகோதரிகள், குறிப்பாக இளைஞர்கள், இன்றைய முதல் கட்ட வாக்குப்பதிவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஒவ்வொரு வாக்கும் பீகாரில் காட்டாட்சி ராஜ்ஜியம் மீண்டும் வருவதைத் தடுக்கவும், நல்லாட்சியைப் பேணவும், வளர்ந்த, தன்னிறைவு பெற்ற பீகாரை உருவாக்கவும் வழி வகுக்கும். ஊடுருவல்காரர்கள் மற்றும் நக்சலைட்டுகளைப் பாதுகாப்பதன் மூலம் நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்பவர்களுக்கு இந்தத் தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டும்.உங்கள் வாக்கு, மாநிலத்தில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் நவீன கல்வி, ஏழைகளின் நலன் மற்றும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை வழங்குவதிலும், பீகாரின் பெருமையை மீட்டெடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *