புதுடெல்லி, ஆக. 18–
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் பட்டியலை சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.
பீகாரில் தீவிர வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி முடிந்தநிலையில், கடந்த 1-ந்தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 7 கோடியே 24 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே இருந்தன. 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன.அவர்களில், 22 லட்சத்து 34 ஆயிரம் பேர் இறந்து விட்டதாகவும், 36 லட்சத்து 28 ஆயிரம் பேர் நிரந்தரமாக இடம் பெயர்ந்து விட்டனர் அல்லது முகவரியில் காணவில்லை என்றும் 7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் சேர்த்து இருப்பதாகவும், இதனால் மேற்கண்ட 65 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாய சீர்திருத்த சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.
இதனை விசாரித்த நீதிபதிகள் பீகார் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 19ம் தேதிக்குள் வெளியிட அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பீகாரில் வாக்குகள் திருட்டு என்று கூறி தேர்தல் ஆணையம் மீதும், மத்திய பா.ஜ.க. அரசு மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “வாக்குகள் திருட்டு என்று சொல்வது அடிப்படை இல்லாதது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கண்டு அஞ்சமாட்டோம். தேர்தல் ஆணையத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ராகுல் காந்தி 7 நாட்களுக்குள் ஆதாரத்துடன் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()




