செய்திகள்

பீகாரில் நடந்தது ஜனநாயக படுகொலை: மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

Makkal Kural Official

பாட்னா, ஆக.27–

பீகாரில் இன்று நடந்த வாக்குரிமை பேரணியில் ராகுல்காந்தியுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். பீகாரில் நடந்தது ஜனநாயக படுகொலை, சாவி கொடுத்தால் ஆடும் பொம்மைப்போல் தேர்தல் ஆணையம் ஆடுகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் மூலம் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைந்து சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

‘வாக்கு திருட்டு’ தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பீகாரில் ராகுல்காந்தி யாத்திரை நடத்தி வருகிறார். கடந்த 17ந்தேதி சசாரம் நகரில் தொடங்கிய வாக்காளர் அதிகார யாத்திரை 16 நாட்கள் நடைபெற்று பாட்னாவில் வருகிற 1-ந்தேதி நிறைவடைகிறது.

பேரணியில் ஸ்டாலின்

இந்த யாத்திரை பேரணியை 1,300 கிலோ மீட்டருக்கு மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். இந்த யாத்திரையில் காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர், இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் பீகாரில், ராகுல்காந்தி நடத்தி வரும் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்றார். இதற்காக அவர், சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பீகார் புறப்பட்டு சென்றார். தர்பங்கா விமான நிலையத்தில் இருந்து முசாபர்பூர் வரை சாலைமார்க்கமாக நடைபெற்ற வாக்குரிமை பேரணியில் ராகுல்காந்தியுடன் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ், கனிமொழி எம்.பி. ஆகியோரும் பங்கேற்றனர்.

ஸ்டான் பேச்சு

இந்த பேரணி நிறைவடையும் இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:-

சமூகநீதி – மதச்சார்பின்மை ஆகியவற்றின் அடையாளமாக இருப்பவர் லாலு பிரசாத் யாதவ். தலைவர் கலைஞரும் லாலு பிரசாத்தும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். எத்தனையோ வழக்குகள், மிரட்டல்கள் வந்தபோதும் பாஜகவுக்கு அஞ்சாமல் அரசியல் செய்ததன் காரணமாக இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் தலைவர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார் லாலு பிரசாத்.

ராகுல் காந்தி, ஜேதஸ்வி யாதவ் செல்லும் இடமெல்லாம் மக்கள் கடலென திரண்டு வருகிறார்கள். ஜனநாயகத்தை காக்க, மக்கள் நலனுக்காக நீங்கள் ஒன்றிணைந்துள்ளீர்கள். உங்கள் இருவரின் நட்பு அரசியலைக் கடந்து உடன்பிறப்புகள் போன்றது. பீகார் தேர்தலில் உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரப்போவது இந்த நட்புதான்.

பா.ஜ.க. தோற்பது உறுதி

பீகாரில் பாஜகவின் துரோக அரசியல் தோற்கப்போகிறது. தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கூட்டணி வெற்றி உறுதியாகியுள்ளது; அதனால்தான் பாஜக தடுக்க முயற்சிக்கிறது. 65 லட்சம் வாக்காளர்களை சொந்த மண்ணின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது பயங்கரவாதம் தவிர வேறு எதுவும் இல்லை. பீகாரில் வாக்காளர்களை நீக்கியது. ஜனநாயக படுகொலை. சாவி கொடுத்தால் ஆடும் பொம்மைப்போல் தேர்தல் ஆணையம் ஆடுகிறது.

கடந்த ஒரு மாத காலமாக இந்தியாவே பீகாரைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதுதான் ராகுல் காந்தியின் பலம் ஆகும். இதுதான் தேஜஸ்வியின் பலம் ஆகும். இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து வரும் போதெல்லாம் அதை எதிர்த்து பீகார் போர்க்குரலை எழுப்பியிருக்கிறது என்பதுதான் வரலாறு ஆகும்.

மக்கள் சக்திக்கு முன் எந்த ஒரு சர்வாதிகாரியும் மண்டியிட்டுத்தான் ஆக வேண்டும் என்பதை பீகார் மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும். இந்தியாவுக்கான வழக்கறிஞராக சகோதரர் ராகுல்காந்தி உள்ளார். உங்களால் இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

பொதுக்கூட்டம் முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு மதியம் 2 மணியளவில் தர்பங்கா விமான நிலையம் வந்தார். பின்னர் சிறப்பு விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

முன்னதாக இந்த பேரணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்ட நிலையில் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் முதல்வராக மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *