சென்னை, அக். 7–
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளாளர் எல்.கே.சுதீஷின் தாயார் அம்சவேணி உடல்நலக்குறைவால் காலமானார். வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அம்சவேணி, அண்மைக்காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.30 மணி அளவில் அவர் உயிரிழந்தார். அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பூத் முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பிரேமலதாவுக்கும், சுதீஷுக்கும் தாயாரின் மறைவு செய்தி தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் அந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.
அம்சவேணியின் உடல், நாளை பகல் 1 மணியளவில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வடபழனி ஏவிஎம் மின்மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பிரேமலதா விஜயகாந்த்துடன், புதுச்சேரி ராமச்சந்திரா மருத்துவமனை தலைவர் ராதா ராமச்சந்திரனும் ஒரு மகள் ஆவார்.
ஸ்டாலின் இரங்கல்
பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் சகோதரி பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
பெற்றெடுத்து அன்பு செலுத்தி வளர்த்த அன்னையை இழந்து வாடும் பிரேமலதா விஜயகாந்த், தே.மு.தி.க.வின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் அனைவர்க்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் அன்பு சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோரின் தாயாரான அம்சவேணி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். பாசமிகு தாயாரை இழந்து வாடும் பிரேமலதா விஜயகாந்த் , சுதீஷ் மற்றும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அம்சவேணியின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
![]()





