புதுடெல்லி, ஜன.4–
இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, காலாவதியான தனிநபர் பாலிசிகளைப் புதுப்பிப்பதற்கான இரு மாத சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், தனிநபர் காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிப்பதற்காக 2 மாத கால சிறப்பு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
2026ம் ஆண்டு ஜனவரி 1 தொடங்கிய இந்த பாலிசி புதுப்பிப்பு திட்டம் வரும் மார்ச் 2ம் தேதி வரையில் அமலில் இருக்கும். இந்த சிறப்புத் திட்டம், தாமதக் கட்டணத்தில் மிகவும் கவர்ச்சிகரமான சலுகையுடன், இணைக்கப்படாத அனைத்து பாலிசிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக எல்ஐசி தெரிவித்துள்ளது. காலாவதியான காப்பீட்டுப் பாலிசிகளுக்கு புத்துயிர் தருவதற்கான சிறப்பு திட்டத்தை நிறுவனம் தொடங்கியுள்ளது.
தாமதக் கட்டணத்தில் 30% வரை, அதே வேளையில் அதிகபட்சமாக ரூ.5,000 வரை சலுகை வழங்கப்படும். பிரீமியம் செலுத்தும் காலத்தில் காலாவதியான நிலையில் உள்ள மற்றும் பாலிசி காலம் நிறைவடையாத பாலிசிகள் இந்த பிரச்சாரத்தின் கீழ் புதுப்பிக்கத் தகுதியுடையவை. அதே வேளையில் மருத்துவம் அல்லது சுகாதாரத் தேவைகளில் எந்தவித சலுகைகளும் இல்லை என்று தெளிவுபடுத்தியது.
பிரீமியம் செலுத்த முடியாத சூழலால் காலாவதியான வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு பாதுகாப்பை மீட்டெடுக்க இந்த திட்டம் உதவும். பாலிசிகளை தொடர்ந்து செலுத்தி பூரண காப்பீட்டு பயனைப் பெற வேண்டும்.
எல்ஐசி தன் வாடிக்கையாளர்களையும் அவர்களின் குடும்ப நலன் மீதான அக்கறையையும் மதிக்கிறது.
சாதகமற்ற சூழ்நிலைகள் காரணமாக சரியான நேரத்தில் பிரீமியம் செலுத்த முடியாத பாலிசிதாரர்களின் நலனுக்காக இந்தப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளதாக எல்ஐசி தெரிவித்துள்ளது.
![]()





