கொச்சி, டிச. 20–
மலையாள சினிமாவின் மூத்த நடிகர் ஸ்ரீனிவாசன் (69) காலமானார். உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை காலமானார். இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மலையாள திரையுலகின் மனதை கொள்ளை கொண்ட நடிகர், திரைக்கதை ஆசிரியர், டைரக்டர் என பல முகங்கள் கொண்டவர் ஸ்ரீனிவாசன் (69). காமெடி என்றாலே இவரது முகம் நினைவுக்கு வரும் அளவுக்கு, சாதாரண மனிதனின் வாழ்க்கையை எளிய நடிப்பில் வெளிப்படுத்தியவர். மோகன்லால், மம்முட்டி போன்ற சூப்பர்ஸ்டார்களுடன் இணைந்து நடித்தாலும், தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் ஸ்ரீனிவாசன்.. நடிப்பை தாண்டி, திரைக்கதை, டைரக்ஷன் துறைகளிலும் அவர் காட்டிய திறமை மலையாள சினிமாவின் முக்கியமான அத்தியாயமாகும். ‘தலையணை மந்திரம்’, ‘சந்தேசம்’, ‘மிதுனம்’ போன்ற படங்கள் இன்று வரை ரசிகர்களின் நினைவுகளில் நீங்கா இடம் பெற்றுள்ளன. ‘வடக்குநோக்கியந்திரம்’ படத்திற்கு கேரள அரசின் சிறந்த பட விருதும், ‘சிந்தாவிஷ்டயாய ஷியாமலா’ படத்திற்கு தேசிய விருதுடன் மாநில அரசின் விருதும் கிடைத்தது அவரது படைப்புத் திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாகும். தமிழில் லேசா லேசா, இரட்டை சுழி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த ஸ்ரீனிவாசன், கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் இன்று காலை அவர் காலமானார். இவருக்கு வினீத் ஸ்ரீனிவாசன், தயான் ஸ்ரீனிவாசன் என இரு மகன்கள் உள்ளனர். இருவரும் திரைத்துறையில் வளரும் கலைஞர்களாக இருக்கின்றனர்.
நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினி இரங்கல்
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டிருக்கும் ஆடியோவில், என் நல்ல நண்பன் ஸ்ரீரீனிவாசன் மரணச் செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருக்கிறது. அவர் திரைப்படக் கல்லூரியில் என் வகுப்புத் தோழர். ஒரு சிறந்த இயக்குநர், நடிகர் மட்டுமல்ல… மிகவும் நல்ல மனிதர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
![]()





