செய்திகள்

பிரதமர் மோடியுடன் சுபான்ஷு சுக்லா சந்திப்பு

Makkal Kural Official

புதுடெல்லி, ஆக.19-

டெல்லியில் பிரதமர் மோடியை இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சந்தித்து பேசினார்.

அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், எஸ்பேஸ் ஆக்சியம் நிறுவனங்கள் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பும் ஆக்சியம்–-4 என்ற திட்டத்தை உருவாக்கியது.

இந்த திட்டத்தின் கீழ் அமெரிக்கா, ஹங்கேரி, போலந்து நாட்டு வீரர்களுடன் சேர்ந்து இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டார்.

கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி விண்வெளி நிலையம் சென்ற அவர், அங்கே ஆய்வுப்பணிகளை முடித்து விட்டு கடந்த மாதம் 15-ந்தேதி வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார்.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதலாவது இந்திய விண்வெளி வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கும் சுபான்ஷு சுக்லா, விண்வெளி பயணத்துக்குப்பின் முதல் முறையாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார்.

பின்னர் நேற்று அவர் டெல்லியில் பிரதமர் மோடியின் வீட்டில் அவரை சந்தித்தார்.

விண்வெளி வீரர்களுக்கான ஜாக்கெட் அணிந்து வந்திருந்த சுபான்ஷு சுக்லாவை பிரதமர் மோடி கட்டித்தழுவி வரவேற்றாார். பின்னர் அவரது தோளில் கைபோட்டவாறு பிரதமர் மோடி நடந்து சென்றார்.

பின்னர் இருவரும் சிறிது நேரம் உரையாடினர். அப்போது தனது விண்வெளி பயண அனுபவங்கள் மற்றும் அங்கே மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து பிரதமர் மோடியிடம் சுபான்ஷு சுக்லா எடுத்துரைத்தார்.

மேலும் ஆக்சியம்-–4 திட்டத்தின் ‘பேட்ஜ்’ மற்றும் விண்வெளி நிலையத்துக்கு எடுத்துச்சென்றிருந்த தேசியக்கொடி ஆகியவற்றை பிரதமர் மோடிக்கு சுபான்ஷு சுக்லா பரிசளித்தார்.

கடந்த ஜூன் 29-ந்தேதி விண்வெளியில் இருந்தவாறே பிரதமர் மோடியிடம் கலந்துரையாடியபோது, இந்த தேசியக்கொடி சுபான்ஷு சுக்லாவின் பின்னணியில் பறக்க விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் விண்வெளியில் இருந்து தான் எடுத்த புகைப்படங்களையும் பிரதமர் மோடியிடம் சுபான்ஷு சுக்லா காட்டினார். பிரதமரும் அவற்றை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து ரசித்தார்.

சுபான்ஷு சுக்லாவுடனான இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி பின்னர் தனது எக்ஸ் தளத்தில் தகவல் பகிர்ந்திருந்தார்.

அதில் அவர், ‘சுபான்ஷு சுக்லாவுடன் சிறப்பான உரையாடல். அவரது விண்வெளி அனுபவங்கள், அறிவியல் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் இந்தியாவின் ககன்யான் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதித்தோம். அவரது சாதனையால் இந்தியா பெருமை கொள்கிறது’ என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *