சென்னை, ஜூலை.24-
பிரதமர் மோடியுடன், எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாக தெரிகிறது. எனவே அவர், தனது ‘மக்களை காப்போம்’ பயணத்திட்டத்தில் மாற்றம் செய்துள்ளார்.
பிரதமர் மோடி வருகிற 26 மற்றும் 27-ந் தேதி என 2 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அவர் 26ந் தேதி மாலத்தீவில் இருந்து புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். அங்கு அவர் விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.
பின்னர் இரவு திருச்சி செல்கிறார். அங்கு இரவு தங்குகிறார். 27ந் தேதி அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் நடக்கும் ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு பகல் 2.25 மணிக்கு பிரதமர் மோடி திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது அவர் திருச்சியில் 26-ந் தேதி இரவு அல்லது 27-ந் தேதி காலையில் பிரதமர் மோடியை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி ஏற்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்காக எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தனது பிரசாரத்தை மாற்றி அமைத்து உள்ளார்.
அதாவது 26-ந் தேதி அவர் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய சட்டசபை தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்வதாக இருந்தது. தற்போது அதனை 29-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக அண்ணா தி.மு.க. தலைமைக்கழகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறது. ஆனால் அதில் காரணங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
![]()





