சென்னை, ஜன.22-
மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை டாக்டர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.
பாரிவேந்தருடன் சந்திப்பு
பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில், மதுராந்தகத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்ட மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை மேடை ஏற்ற பா.ஜ.க. தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
இதனை ஒருங்கிணைப்பதற்காக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார்.
டி.டி.வி.தினகரனை சந்தித்த அவர், மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை பார்வையிட சென்றார். அங்கிருந்து திரும்பி வரும் வழியில் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் ஓட்டலில் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் மற்றும் தலைவர் ரவி பச்சமுத்துவை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்.
பாரிவேந்தர் நிருபர்களிடம் கூறும்போது, “ஆரம்பம் முதலே தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறோம். எங்களுக்கு இத்தனை இடங்கள் தாருங்கள் என்று பேரம் பேசப்போவதில்லை. ஆனால், இந்த முறை எங்கள் கட்சியின் இருப்பை உறுதி செய்ய நாங்கள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம்” என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், மத்திய அமைச்சர் பியூஸ்கோயலை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகளும், பா.ம.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் பாலு, பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட பா.ம.க. நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
பாரிவேந்தர், டாக்டர் அன்புமணி ராமதாசை சந்தித்த மத்திய மந்திரி பியூஸ் கோயலை நாளை நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பை விடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கேற்கும் பா.ம.க.வுக்கு 18 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ஏற்கனவே பேசி உறுதிசெய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
![]()





