Uncategorized

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன?

Makkal Kural Official

சென்னை, ஜூலை 14–

தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டி.ஜி.பி. மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராஜராஜ சோழன் என்பவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை அமல்படுத்த, நீலாங்கரை போலீசாருக்கு உத்தரவிடக் கோரி ஜமுனா சிவலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை காவல் துறையினர், இதுநாள் வரை செயல்படுத்தாமல் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேபோல பல வழக்குகள், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலைலேயே உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, மாஜிஸ்திரேட் மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் பிடிவாரண்ட்கள் அடிப்படையில், குறித்த காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடித்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், வாரண்டை செயல்படுத்தாதது குறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து, புதிதாக வாரண்ட் பிறப்பிக்க கோர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதை விடுத்து, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வாரண்ட்களை நிலுவையில் வைத்திருக்க காவல் துறையினருக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்த நீதிபதி, தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என்பது குறித்து ஜூலை 23 ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டி.ஜி.பி.க்கும், சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல, தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளன என்பது குறித்து ஜூலை 23–ந் தேதி அறிக்கை சமர்பிக்கும்படி, சென்னை ஐகோர்ட் தலைமைப் பதிவாளருக்கும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 24–ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *