புவனேஸ்வர், செப். 27–
ஒடிசாவின் ஜர்சுகுடாவில் தொலைத்தொடர்பு, ரெயில்வே மற்றும் உயர்கல்வி போன்ற துறைகளில் ரூ. 60,000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பிஎஸ்என்எல் 4ஜி சேவையையும் சுதேசி தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட 97,500க்கும் மேற்பட்ட 4ஜி தொலைத்தொடர்பு கோபுரங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
ஏற்கெனவே 2.2 கோடி வாடிக்கையாளர்களுக்கு 4ஜி தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் 100% சதவீத 4ஜி சேவையை வழங்கும்பொருட்டு துவக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பல்பூர் நகரில் ரூ. 273 கோடி செலவில் கட்டப்பட்ட 5 கி.மீ மேம்பாலத்தையும் திறந்து வைத்தார்.
மேலும் நாடு முழுவதும் 8 ஐஐடிக்களின் விரிவாக்கத்திற்குப் மோடி அடிக்கல் நாட்டினார். அடுத்த நான்கு ஆண்டுகளில் 10 ஆயிரம் புதிய மாணவர்கள் படிப்பதற்கான திறன் கொண்டதாக இது அமைய உள்ளது.
பின்னர் மோடி பேசுகையில் கூறியதாவது:–
‘‘இன்று தொடங்கப்பட்ட பெர்ஹாம்பூர்–உத்னா அம்ரித் பாரத் ரெயில் குஜராத்தில் உள்ள ஒடியா மக்களுக்கு பயனளிக்கும்.
கலை மற்றும் கலாச்சாரத்தில் ஒடிசா மாநிலம் உலக புகழ் பெற்றது. ‘இரட்டை எஞ்சின்’ அரசாங்கத்தின் முயற்சிகளால் ஒடிசா வேகமாக முன்னேறி வருகிறது. இது வரை நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு 4 கோடிக்கு மேற்பட்ட வீடுகளை கட்டி கொடுத்துள்ளோம். பொருளாதார ரீதியாக அதிகாரம் பெற விரும்பும் நாடு, கப்பல் கட்டுமானத்தில் கவனம் செலுத்துகிறது. கப்பல் கட்டுமானம் தளத்தை ஊக்குவிக்க பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தலித்துகளுக்கு
அளிப்பதில் கவனம்
ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு வரி விதித்தது காங்கிரஸ் அரசு. ஆனால் பா.ஜ.க. அரசு ரூ.12 லட்சமாக வரம்பை உயர்த்தியது. பா.ஜ.க. அரசு ஏழை மக்கள், தலித்துகள், பழங்குடியினருக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்துகிறது.
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் மக்களைக் கொள்ளையடிப்பதால், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். காங்கிரஸ் மக்களைக் கொள்ளையடிக்க எந்த வாய்ப்பையும் விட்டுவைக்கவில்லை.
ஒடிசா பல தசாப்தங்களாக வறுமையைக் கண்டுள்ளது, ஆனால் இப்போது செழிப்புக்கான பாதையில் உள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு 4ஜி தொலைத் தொடர்பு சேவைகளைத் தொடங்கிய உலகின் 5 நாடுகளில் இந்தியாவும் இப்போது ஒன்று ஆகும். உள்நாட்டிலேயே தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபடும் டென்மார்க், ஸ்வீடன், தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் 5-வது நாடாக இந்தியாவும் இணைகிறது.
பிஎஸ்என்எல் மூலமாக இந்தியா உலகளாவிய தொலைதொடர்பு உற்பத்தி மையமாக மாறுகிறது. சுதேசி 4ஜி இணைய சேவை இன்று இங்கிருந்து தொடக்கி வைக்கிறேன். இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1 லட்சம் 4ஜி மொபைல் கோபுரங்கள் இன்று பயன்பாட்டுக்கு வருகின்றன. அதிவேக இணையம் பெறாத பகுதிகள், கிராமங்கள் இதன் மூலமாக பயன்பெறும். எல்லையில் உள்ள நமது வீரர்களும் பாதுகாப்பான அதிவேகமான உள்நாட்டு சேவைகளை இனி பயன்படுத்த முடியும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ஜூன் 2024ல் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடந்த 15 மாதங்களில் பிரதமர் ஒடிசாவிற்கு வருகை தருவது இது 6வது முறையாகும்.
![]()





