சென்னை, டிச. 15:
பா.ம.க.வில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் அன்புமணி மட்டுமே என ஜி.கே. மணி குற்றம்சாட்டினார்.
பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையிலான அதிகார மோதல் தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக ராமதாஸ் பின்னால் இருப்பவர்கள் தவறாக வழிநடத்துகின்றனர் என்று அன்புமணி தரப்பு குற்றச்சாட்டை முன்வைக்கிறது. அதிலும் ஜி.கே.மணி மீது கடும் விமர்சனங்களை கூறி வருகின்றனர். இவரை துரோகி என்று அன்புமணி தரப்பு விமர்சித்துள்ளது. நேற்றைய தினம் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட போது, அன்புமணியை பார்த்து ஜி.கே.மணி வணக்கம் தெரிவித்து விட்டு சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பா.ம.க. கெளரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
ராமதாஸ், எனது குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் அரசு பணிக்கு போகமாட்டோம் என்று கூறினார். இந்த நேரத்தில், அன்புமணி என்னிடம் வந்து மத்திய மந்திரி பதவி கேட்கக் கூறினார். நான் ராமதாசிடம் பேசி, நீங்கள் பதவிக்கு வரமாட்டேன் என்கிறீர்கள். உங்கள் மகனையாவது மத்திரியாக்கலாம் என்றேன். அவர் கடுமையாக என்னிடம் கோபப்பட்டார். நான் செய்த சத்தியம் என்னவாகும் என்றார். கட்சியின் தலைவர் என்ற திமிறில் பேசுகிறாயா என்று என்னிடம் கூறினார். அதன்பிறகு, காடுவெட்டி குருவை அழைத்து சென்று மீண்டும் ராமதாசிடம் பேசினோம். அவரும் வற்புறுத்தினார். அதன்பிறகு, அன்புமணியை மந்திரியாக்க ராமதாஸ் ஒப்புக்கொண்டார்.
பா.ம.க. கூட்டணி குறித்து எந்த தலைவர்களுடனும் நான்தான் பேசுவேன். ஒருமுறை என்னிடம் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு நீங்கள்தான் போகவேண்டும் என்று ராமதாஸ் கூறினார். நான் அன்புமணியை பரிந்துரைத்தேன். அவரைத்தான் மாநிலங்களவை உறுப்பினராக்கினோம். ராமதாஸ் பலமுறை சிறைக்கு போனார். அன்புமணி எத்தனை முறை சிறைக்கு போனார். அன்புமணியை யாரும் சந்திக்க முடியவில்லை என்று நிர்வாகிகள் ராமதாசிடம் வந்து சொன்னார்கள். பாமக தனித்து போட்டியிட்டபோது, அன்புமணிதான் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இப்படி, அவருக்கு எந்த கெடுதலும் செய்யாத என்னைப்பார்த்து துரோகி, அப்பாவையும், என்னையும் பிரித்துவிட்டார் என்கிறார்.
அன்புமணி மனசாட்சியோடு
பேச வேண்டும்
என் அப்பாவையும் என்னையும் ஜி.கே.மணி பிரித்துவிட்டார் என அன்புமணி கூறுகிறார். என்னை துரோகி என சொல்வது வேதனையாக இருக்கிறது. நான் அன்புமணிக்கு எந்த வகையிலும் கெடுதலோ துரோகமோ செய்யவில்லை. உங்கள் மகன் அன்புமணியை நீங்கள் பார்க்காதீங்கள் என நான் சொல்ல முடியுமா, இல்லை நான் சொன்னால் ராமதாஸ் கேட்பாரா, பிறகு எப்படி நான் அவர்களை பிரிக்க முடியும்? ராமதாஸும் அன்புமணியும் உட்கார்ந்து பேசினால்தான் தீர்வு கிடைக்கும். வீட்டுக்குள் பேச வேண்டிய விஷயத்தை பொதுவெளியில் பேசியதால்தான் இத்தனை பிரச்சினை ஆரம்பித்தது.ராமதாஸ் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி பேசியிருக்கிறார். அன்புமணி மனசாட்சியோடு பேச வேண்டும். ராமதாஸ் உடன் நான் இருப்பதால்தான் அன்புமணி என்னை வசைபாடுகிறார்.
அன்புமணியால் பா.ம.க.வுக்கு ஏற்பட்ட சோதனை, நெருக்கடி சொல்லி மாளாது. என் அப்பாவுக்கு அடுத்ததாக உங்களை நினைக்கிறேன் என கூறியவர் அன்புமணி. பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள பிளவிற்கு நான் காரணம் என பேசியிருக்கிறார் அன்புமணி. பா.ம.க.வில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் அன்புமணி மட்டுமே. கட்சியில் பிரச்சினை இருக்கும் போது, விருப்ப மனு வாங்குவது மோசடி வேலையாகும். பா.ம.க. நிறுவனர், தலைவர் ராமதாஸ் தான். பா.ம.க.வில் எனக்கு எந்த பதவியும் வேண்டாம். ராமதாஸ் – அன்புமணி ஒன்று சேர தயார் என்றால் நான் கட்சியிலிருந்து விலகத் தயார். அன்புமணி யார் யார் துரோகிகள் என நினைக்கிறோரோ அவர்கள் அனைவரும் பா.ம.க.விலிருந்து விலகத் தயாராக இருக்கிறோம். ராமதாஸ் உடன் அன்புமணி இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.மணி பேசினார்.
![]()





