சென்னை, ஆக.18-
வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.வினர் விரும்பும் நல்லதொரு கூட்டணி உருவாகும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
புதுவை அடுத்த பட்டானூரில் நேற்று நடந்த பா.ம.க. மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
நமது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள், ஒரு சமுதாயத்திற்கானது மட்டுமல்ல. தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களுக்கான தீர்மானங்கள் தான். தமிழ்நாட்டில் உள்ள 324 சமுதாய மக்களுக்காகத்தான் தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன்.
நாம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தபோது, நமக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தார்கள். இதன் மூலம் 115 சாதிகளை சேர்ந்தவர்கள் பயன்பெறுகிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அனைத்து சமுதாய மக்களுக்காகத்தான். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் என் பின்னால் வாருங்கள். நான் காட்டும் வழியில் வாருங்கள். உங்களுக்கு எல்லாம் கிடைக்கும்.
இப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆவலாக எதிர்ப்பார்ப்பது யாருடன் கூட்டணி? என்பதுதான். உங்கள் உள்ளங்களில் எந்த கூட்டணிக்கு போனால் இயற்கையான வெற்றி கிடைக்கும் என்பதற்கான முடிவு எடுக்கும் முழு அதிகாரத்தை எனக்கு கொடுத்தீர்கள். நிச்சயம் உங்கள் மனதில் நினைப்பதை நான் அறிவேன். ஏனென்றால் உங்கள் மனதில் உள்ளதை நான் ‘எக்ஸ்ரே’ பிடித்து பார்த்துவிடுவேன். நீங்கள் (பா.ம.க.வினர்) விரும்பியபடி நல்லதொரு கூட்டணி உருவாகும் என உறுதி அளிக்கிறேன்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து 10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக அறிவுறுத்தினேன். ஆனால் இதுவரை பயன் எதுவுமில்லை. சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் எடுக்கும் என பொறுப்பை தட்டிக்கழிக்கிறார்கள்.
தமிழக மக்கள் இடஒதுக்கீட்டை எதிர்ப்பார்த்து இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு கூட 10.5 சதவீத இடஒதுக்கீடு மனதில் பதிந்துவிட்டது. எனவே இடஒதுக்கீட்டுக்காக இளைஞர்கள் கடுமையான போராட்டத்தை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இதற்காக நிச்சயம் நாங்கள் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
![]()





