செய்திகள்

பா.ம.க. இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணி மகன் நியமனம்: ராமதாஸ் அறிவிப்பு

Makkal Kural Official

திண்டிவனம், அக்.3-

பா.ம.க. இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணி மகன் தமிழ்குமரனை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்தார்.

விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் கடந்த 28.12.2024 அன்று நடைபெற்ற பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. இளைஞர் சங்க தலைவராக தனது பேரனான முகுந்தனை (டாக்டர் ராமதாசின் மூத்தமகள் காந்திமதியின் மகன்) நியமிப்பதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டாக்டர் அன்புமணி, மைக்கை மேஜையில் வீசிவிட்டு வெளியேறினார்.

அதன்பிறகுதான் தந்தை, மகனான டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. மூத்த நிர்வாகிகள், குடும்பத்தினர் சமரசம் பேசியும் இன்னும் இந்த பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. இருவருக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் உருவானதால் கடந்த மே மாதத்தில் முகுந்தன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் பா.ம.க. இளைஞர் சங்க தலைவராக தமிழ்குமரனை(கவுரவ தலைவர் ஜி.கே.மணியின் மகன்) டாக்டர் ராமதாஸ் நேற்று நியமனம் செய்தார். இதற்கான ஆணையை தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ், நிர்வாகக்குழு உறுப்பினர் காந்திமதி ஆகியோர் தமிழ்குமரனிடம் வழங்கினர்.

பின்னர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ம.க. இளைஞர் சங்க தலைவராக நியமிக்கப்பட்ட தமிழ்குமரனுக்கு பேராதரவு தர வேண்டும். அவர் சிறப்பாக செயல்பட நானும் உறுதுனையாக இருப்பேன்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த ஒருவர் முகநூலில், ராமதாசின் கழுத்தில் துண்டு போட்டு நெரிக்க வேண்டும் என்றும், முகத்தில் தலையணையால் அழுத்தி கொலை செய்ய வேண்டும் என்றும் மாற்றுக்கட்சியில் இளைஞரணி பதவியில் உள்ள நபர் கேவலமாக எழுதுகிறார். சமூக வலைதளங்களில் தவறாக எழுதுபவர்களை ஊடக நண்பர்கள் கண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து டாக்டர் ராமதாசிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் விவரம் வருமாறு:-

கேள்வி:- கரூரில் விஜய் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்க்கவில்லை. நிகழ்வு நடந்தபோதே கிளம்பி சென்னைக்கு சென்றுவிட்டார். இதை மூத்த அரசியல்வாதியாக நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?.

பதில்:- அரசியல் கூட்டங்கள் நடத்துபவர்கள் ஒரு உயிர் கூட பறிபோகாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு காவல் துறை வழிகாட்ட வேண்டும். இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தலைவர்கள் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று அனைத்து கட்சியினருக்கும் வேண்டுகோள் வைக்கிறேன். கரூர் போன்ற துயர சம்பவம் இனியும் நடக்க கூடாது.

கேள்வி:- கரூர் சம்பவத்துக்கு தி.மு.க. சதி செய்திருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறதே?

பதில்:- சதி செய்தீர்களா என்று ஒரு தி.மு.க. நிர்வாகியிடம் கேட்டு சொல்கிறேன்.

கேள்வி:- கரூர் சம்பவத்தில் முதலமைச்சரின் செயல்பாடு எப்படி உள்ளது?

பதில்:- முதலமைச்சர் என்ன செய்ய வேண்டுமோ, அதை அவர் செய்திருக்கிறார்.

கேள்வி:- மரக்காணம் கலவரத்தின்போது சம்பந்தமே இல்லாமல் உங்களை, அப்போதைய அரசு கைது செய்தது. ஆனால் 41 பேர் இறந்தபோது விஜய் சம்பவ இடத்தில் இருந்துள்ளார். அவர் மீது அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையே?

பதில்:- விசாரணை நடக்கிறது.

கேள்வி: கரூர் சம்பவம் நடந்த 3 நாட்கள் கழித்து விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கரூர் சம்பவத்திற்கு முதலமைச்சர்தான் காரணம் என்ற விதத்தில் வீடியோ உள்ளதாக சமூக வலைதளத்தில் பரவியுள்ளதே?

பதில்:- இதற்கு தமிழக முதலமைச்சர் எப்படி காரணமாக முடியும். அக்கப்போர் ஆசாமிகள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் செய்யும் வேலையாக இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *