திருமாவளவன் உறுதியான முடிவு
சென்னை, ஜன. 25–
பா.ம.க. இருக்கும் அணியில் இடம் பெறமாட்டோம் என்கிற முடிவில் உறுதியாக இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:–
வரும் தமிழக சட்டசபை தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 3 இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்க இயலாத நிலை உள்ளது. மேலும் ஏற்கனவே கூட்டணிக்குள் அதிகம் பேர் இருப்பதால் இரண்டு இலக்க அளவில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றே கேட்டுள்ளோம்.
இந்தி மயமாகுதலை தீவிரமாக நடைமுறைப்படுத்த மோடி அரசு குறியாக உள்ளது. மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை. இந்தியாவில் பேசப்படுகிற அனைத்து மொழிகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்னிறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயல்பட்டு வருகிறது.
தேசிய அளவில் அவரவர் தாய்மொழியை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. இரட்டை என்ஜின், டெல்லியில் ஒரு என்ஜின், தமிழ்நாட்டில் ஒரு என்ஜின் என்று சொல்லுகிறாரா என்ற தெளிவு தேவைப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி பொறுத்தவரை தமிழ்நாட்டில் அண்ணா தி.மு.க. தலைமையில் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க., பா.ம.க. இருக்கும் அணியில் இடம்பெறமாட்டோம் என்று 2011ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு எடுத்த முடிவில் இன்றும் உறுதியாக இருக்கிறோம். பா.ம.க.வின் ராமதாஸ் தரப்பு அணியை தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொள்வது குறித்து தி.மு.க.தான் முடிவு செய்ய வேண்டும்.
பா.ஜ.க.வோடு விஜய் எந்த அளவு உறவாடுகிறார் என்பதை நாம் எடுத்துச் சொல்ல முடியாத ஒரு நிலை. ஆனால் பா.ஜ.க. தலைமையிலான அரசையோ செயல்பாடுகளையோ அவர் கடுமையாக விமர்சிக்க வேண்டிய இடத்தில் கூட விமர்சிக்கவில்லை என்ற கேள்வி எழும்புகிறது. தேர்தலில் அவர் தனித்துப் போட்டியிடுவார் என நினைக்கிறேன். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
![]()





