செய்திகள்

பா.ஜ.க. மூத்த தலைவர் விஜய்குமார் மல்ஹோத்ரா காலமானார்: பிரதமர் மோடி நேரில் அஞ்சலி

Makkal Kural Official

புதுடெல்லி, செப். 30–

பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான விஜய்குமார் மல்ஹோத்ரா காலமானார். அவருக்கு வயது 94. அவரது உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜய்குமார் மல்ஹோத்ரா சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

டெல்லியில் உள்ள ராக்பஞ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. மல்ஹோத்ரா உடலுக்கு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா, டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்:–

விஜய் குமார் மல்ஹோத்ரா தனித்துவமான தலைவராக விளங்கினார். மக்கள் பிரச்சினைகளை நன்கு அறிந்திருந்த மல்ஹோத்ரா, டெல்லி பாஜகவை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. மல்ஹோத்ராவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டாரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

லாகூரில் பிறந்த விஜய் குமார் மல்ஹோத்ரா, 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். 2 முறை டெல்லி எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார்.

டெல்லியின் முதல் பாஜக தலைவரான இவர், இரண்டு முறை அப்பதவியை வகித்துள்ளார். இரண்டு முறை டெல்லி சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.

கடந்த 1999ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை தோற்கடித்தார். 2008ம் ஆண்டு டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக விஜய் மல்ஹோத்ரா களமிறக்கப்பட்டார். அரசியல் மட்டுமின்றி விளையாட்டுத் துறை நிர்வாகத்திலும் திறம்பட செயல்பட்டுள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயல் தலைவர், துணைத் தலைவர் பதவிகளையும் வகித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *