புதுடெல்லி, ஜன. 20:
பா.ஜ.க.வின் தேசியத் தலைவராக நிதின் நபின் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பா.ஜ.க.வின் 11-வது தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா கடந்த 2020 ஜனவரி 20ம் தேதி பொறுப்பேற்றார்.
பா.ஜ.க.வில் தலைவர் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிந்தபோதிலும், சில காரணங்களால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இந்த சூழலில், பீகார் மாநில மந்திரியாக இருந்த நிதின் நபின் (வயது 45), கட்சியின் செயல் தலைவராக கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக 12-வது தேசியத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜனவரி 20ம் தேதி (இன்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வேட்புமனுக்கள் நேற்று பெறப்பட்டன.
இப்போதைய பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நிதின் நபின் சார்பில் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி டாக்டர் கே. லட்சுமணிடம் வழங்கினர்.
வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
பா.ஜ.க தேசிய தலைவர் பதவிக்கான தேர்தலில் 37 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்துமே செயல் தலைவர் நிதின் நபினை தேசிய தலைவராக முன்மொழிந்திருந்தன.
கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு நிதின் நபின் பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டுள்ளதால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து இன்று காலை டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில், அக்கட்சியின் தேசிய தலைவராக நிதின் நபின் முறைப்படி பொறுப்பேற்றார்.
இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெ.பி.நட்டா, நிதின் கட்கரி, கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் பங்கேற்ற வாழ்த்து தெரிவித்தனர். மேலும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் பங்கேற்று நிதின் நபினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
யார் இந்த நிதின் நபின்?
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 1980 மே 23ல் நிதின் நபின் பிறந்தார். இவர் மறைந்த பா.ஜ.க. தலைவர் நவீன் கிஷோர் பிரசாத் சின்ஹாவின் மகன் ஆவார்.
கடந்த 2006ல் பாட்னாவின் பாங்கிபூர் தொகுதியில் வென்று பீகார் சட்டசபைக்கு முதல்முறையாக தேர்வானார். 4 முறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார்.
இவருக்கு பீகாரின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இவர் ஏற்கனவே பாஜ இளைஞர் அணியின் தேசிய பொதுச்செயலாளர், பீகார் பாஜக மாநில தலைவர் போன்ற பதவிகளை வகித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()





