விழுப்புரம், நவ. 26–
விழுப்புரம் மாவட்டம் மணம்புண்டியில் உள்ள முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்சார்பில் தேசிய அளவிலான பாலின சமத்துவ விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சமூக ஒருங்கிணைப்பு பிரிவின் மூலம் பாலினம் தொடர்பான விழிப்புணர்வுகள், பயிற்சிகள் 37 மாவட்டங்களில் 388 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச பாலின விழிப்புணர்வு பிரச்சாரம் கடந்த மூன்று ஆண்டுகளில் சிறப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்தாண்டும் 12,479 ஊராட்சிகள் அளவில் நடத்தப்படுகிறது.
அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் மணம்புண்டியில் உள்ள முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தேசிய அளவிலான பாலின சமத்துவ விழிப்புணர்வு பேரணி தொடக்கி வைக்கப்பட்டது. இந்த பேரணியில் மகளிர் சுய உதவிக்குழுவைச் சார்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் பாலினம் தொடர்பான, தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு 25–ந் தேதி முதல் 23.12.2025 வரை மாவட்டம், வட்டம், கிராம ஊராட்சி மற்றும் கல்லூரி, பள்ளிகள் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக விழுப்புரம் மாவட்டம் மணம்புண்டியில் உள்ள முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தேசிய அளவிலான பாலின சமத்துவ உறுதிமொழியினை கலெக்டர் தலைமையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முகையுர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலச்சந்தர், ஸ்ரீதர், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
![]()





