சென்னை, செப்.25–
மாணவர்கள் புத்தக அறிவுடன் மட்டுமல்லாமல் தொழில்நுட்ப அறிவுடன், சமூக உணர்வு, பண்பாடு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை கற்றறிய கல்லூரி தோறும் நிறுவன மேலாண்மைக்குழுவினை அமைத்திட ஏதுவாக சென்னை, பாரதி மகளிர் கல்லூரியில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார்.
உயர்கல்வித் துறை அரசு செயலாளர் பொ.சங்கர் தலைமை வகித்தார், கல்லூரிக் கல்வி ஆணையர் எ. சுந்தரவல்லி முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில் அமைச்சர் பேசியதாவது:–
இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் புத்தக அறிவுடன் மட்டும் இல்லாமல், தொழில்நுட்ப அறிவு, சமூக உணர்வு, பண்பாடு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். உலகம் விரைவாக முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில், நம் மாணவர்களும் உலகளாவிய போட்டியில் முன்னிலை வகிக்க வேண்டும் என்பதே கல்வி நிறுவனங்களின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்.
அரசு கல்லூரிகளில் அருகில் உள்ள தொழில் நிறுவனங்களோடு இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்து உருவாக்கப்பட்டதே நிறுவன மேலாண்மைக் குழுவாகும். மேலாண்மை குழுவின் பங்கு, மாணவர்களுக்கு கல்வியை மட்டும் அளிப்பதல்ல; அவர்களின் திறன்களைக் கண்டறிந்து வளர்ப்பதிலும், சமூகத்திற்கு பொறுப்புணர்ச்சியுள்ள குடிமக்களை உருவாக்குவதிலும் செயலாற்ற வேண்டியது அவசியம்.
125 கல்லூரிகளில்…
இன்றைக்கு சுமார் 125 கல்லூரிகளில் இக்குழுவானது தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக்கழக பயிற்சி வழிகாட்டு மையத்தின் வழிகாட்டுதலோடு உருவாக்கப்பட உள்ளது. படிப்படியாக அனைத்துக் கல்லூரிகளிலும் இது உருவாக்கப்படும். புதிய மேலாண்மை குழு, மாணவர்களின் திறன்களை மேம்படுத்தி, சமூகத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் என நான் நம்புகிறேன்.
உங்கள் வாழ்க்கையை மாற்றிக் காட்டும் சக்தி கல்வியில் தான் இருக்கிறது. உழைப்பும் ஒழுக்கமும் இருந்தால் எந்த உயரத்தையும் எட்ட முடியும். மேலாண்மை குழுவின் வழிகாட்டுதலுடனும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடனும், நீங்கள் அனைவரும் நாட்டின் பெருமைமிக்க குடிமக்களாக உருவாக என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இவ்விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் மேன்டோ ஆட்டோமோட்டிவ், யுபிஎஸ் (United Parcel Service) மற்றும் அக்னிகுல் ஆகிய தொழிற்துறையினருக்கு நிறுவன மேலாண்மைக்குழுவில் உறுப்பினராவதற்கான அழைப்பிதழினை வழங்கினார்.
இவ்விழாவில் 5வது மண்டலக்குழுத் தலைவர் பி.ஸ்ரீராமலு, கல்லூரி முதல்வர் சு. தாரணி, இணை இயக்குநர் (நிர்வாகம்) எஸ்.லட்சுமி, இணை இயக்குநர் (திட்டம்) பா.சிந்தியா செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
![]()





