சென்னை, ஜன. 3:
பாரதியின் கனவை நனவாக்கு பவராக மோடி செயல்படுகிறார் என்றும், 2047-ம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தில் உலகளவில் முதல் இடத்தை இந்தியா எட்டும் என்றும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
துணை ஜனாதிபதியாக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் பாராட்டு விழா நடந்தது.
விழாவுக்கு முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே தலைமை தாங்கினார். புதிய நீதிக்கட்சி நிறுவனர் தலைவர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்தார். விழாவில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-–
ஏ.சி.சண்முகமும், ஐசரி கணேசும் சென்டிரல் ரெயில் நிலையத்தில் எம்.ஜி.ஆர். சிலை நிறுவ வேண்டும் என்று கோரினார்கள். அதை ரெயில்வே மத்திரியிடம் எடுத்துரைப்பேன். இந்திய கலாச்சாரத்திற்கு அடித்தளமாக ஒரு கலாச்சாரம் இருக்கிறது என்றால் அது தமிழ் கலாச்சாரம் தான். அதனால் தான் பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழின் பெருமையை, தமிழரின் பெருமையை உயர்த்தி பேசுகிறார்.
அடுத்த பிறவி ஒன்று இருந்தால் நான் தமிழகத்தில் பிறக்க விரும்புகிறேன் என்று காந்தி சொன்னார். மோடியும், தமிழ் மண்ணில் பிறக்க வேண்டும், தமிழனாக பிறக்க வேண்டும் என்று சொன்னார்.
உலகின் முதல் இடத்தை
தொட்டே தீருவோம்
பிரதமர் மோடி பதவியேற்கும் முன் இந்தியா பொருளாதாரத்தில் எத்தனையாவது இடத்தில் இருந்தது என்று தெரியாது. பதவியேற்ற பின் 5-ம் இடத்தை தொட்டது. தற்போது 3-வது இடம் வந்துள்ளது. 2047-ம் ஆண்டுக்குள் நிச்சயமாக உலகின் முதல் இடத்தை தொட்டே தீருவோம்.
வடபுலத்தில் இருப்பவர்களும் தமிழை கற்க வேண்டும் என்பதற்காக காசி பல்கலைக்கழகத்தில் தமிழில் இருக்கை அமைத்து 120 பேர் தமிழை கற்கிறார்கள். வ.உ.சி.யின் பெயரை தூத்துக்குடி நவீன துறைமுகத்திற்கு வைத்துள்ளோம். ராஜேந்திர சோழனின் பெயர் ஒரு கடற்படை தளத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் நினைவு அஞ்சல் தலை வெளியீடு என்னுடைய தலைமையில் துணை ஜனாதிபதி இல்ல வளாகத்தில் நடைபெற்றது. இவையெல்லாம் நம் தமிழர்களுக்கு எல்லாம் பெருமை சேர்த்தது.
பாரதி கண்ட கனவுகளுக்கு எல்லாம் நனவை தருபவராக மோடி செயல்படுகிறார். சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்றான் பாரதி. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. இன்று தெலுங்கர்களுக்கு எதிராக பேசுவதையே பலர் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அந்த தெலுங்கர்கள் நமக்கு தந்தது தான் தெலுங்கு கங்கை திட்டம். அதனால் தான் சென்னை மாநகரத்திற்கு ஆண்டு முழுவதும் குடிநீர் சிரமமின்றி கிடைக்கிறது. எனவே, பாரத தேசத்தின் மகத்தான வெற்றிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
‘உலகம் ஒன்று’ என முதலில் சொன்னவர் காரல் மார்க்ஸ் அல்ல; அதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என, தமிழ் புலவர் கூறியதை மோடி சொன்னார். அதன்பின்தான், தமிழர்களின் பெருமையை உலகம் அறிந்து கொண்டது.
மாநிலங்களுக்கு நன்மை நடக்க வேண்டுமானால், இந்தியா வலிமையான நாடாக இருக்க வேண்டும். இந்தியா வலிமை அடைவது உலக நாடுகளை அச்சுறுத்து வதற்காக அல்ல. இனியொரு முறை, எந்த நாடும் இந்தியாவை அச்சுறுத்துவது குறித்து கனவில்கூட நினைக்கக் கூடாது என்பதற்காகவே.நான் சிறுவனாக இருந்தபோது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் படேல் குறித்து படித்திருக்கிறேன்.
எந்த வழிபாட்டுக்கும் நாம் எதிராக இருந்தது இல்லை. மராட்டியர்கள் தமிழகத்தின் பல பகுதிகளை கைப்பற்றினர். அதுபோல் ராஜேந்திர சோழன், வட மாநிலங்களில் பல பகுதிகளை கைப்பற்றினார். இந்தோனேஷியா, கம்போடியா வரை ஆண்டார். அப்பகுதி மக்களின் உணர்வுகளை மதித்து போற்றினாரே தவிர, ஒருபோதும் மிதிக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், ஓய்வு பெற்ற நீதிபதிகள், வள்ளிநாயகம், ஜோதிமணி, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், வேல்ஸ் பல்கலை வேந்தர் ஐசரி கணேஷ், திரைப்பட இயக்குநர் பாக்யராஜ், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சொக்கலிங்கம், தமிழ்நாடு பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை வாழ்த்திப் பேசினார்கள்.
![]()





