புதுடெல்லி, ஜூலை 29–
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் பெற்றோர்களை இழந்த 22 குழந்தைகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தத்தெடுக்க முடிவு செய்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் கடந்த மே மாதம் 7–ந்தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. முப்படைகளும் இணைந்து நள்ளிரவு 1.05 மணி முதல் 2.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் துல்லியமாக தாக்கி அழித்தது. இதில் 100-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவித்தது.
அதன் தொடர்ச்சியாக ஜம்மு– காஷ்மீர் எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் ஷெல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஜம்மு–காஷ்மீரில் 27 பேர் உயிரிழந்தனர்.70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். குறிப்பாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள பூஞ்ச், ஸ்ரீநகர், ரஜோரி எல்லையில் வாழும் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். அவர்களுடைய வீடுகள் சேதமடைந்தன.
இந்த நிலையில், பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் பெற்றோர் இருவரையும் இழந்த 22 குழந்தைகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தத்தெடுக்கவுள்ளதாக ஜம்மு – காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா தெரிவித்துள்ளார்.அந்த குழந்தைகளின் படிப்புக்கான முதல்கட்ட நிதியுதவி நாளை (30–ந்தேதி) வழங்கவுள்ளதாகவும், அவர்கள் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்யும்வரை கல்விக்கான நிதியுதவியை ராகுல் காந்தி வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்துக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.அப்போது தாக்குதலில் பெற்றோர்களை இழந்துள்ள குழந்தைகளின் பட்டியலைத் தயார் செய்ய உள்ளூர் கட்சித் தலைவர்களிடம் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார்.அதனடிப்படையில், பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அரசின் தரவுகளுடன் சரிபார்க்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.
![]()





