பீஜிங், செப்.1–
”பயங்கரவாதத்திற்கு எதிராக இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறோம்” என மாநாட்டிற்கு பிறகு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அமைப்பின் உறுப்பினர்களாகவுள்ள 10 நாடுகளின் தலைவர்களில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபும் ஒருவர். அவரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் குழு படம் எடுத்துக் கொண்டனர்.
2ம் நாளான மாநாட்டில் இன்று பிரதமர் மோடி பேசும்போது, பயங்கரவாதத்துக்கு எதிரான தனது கண்டனத்தை பதிவு செய்தார்.தொடர்ந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சார்பில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.
இது குறித்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் கடுமையாக கண்டிக்கின்றன. பயங்கரவாதத்திற்கு எதிராக இரட்டை நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் உறுப்பு நாடுகள் கடுமையாகக் கண்டிக்கின்றன. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுக்கிறோம்.
பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள், இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தாக்குதல் நடத்தியவர்கள், நிதி மற்றும் ஆதரவு அளித்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்’’.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()





