புதுடெல்லி, ஜூலை 29–
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ப.சிதம்பரம் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் வழங்க விரும்புகிறார் என்றும் அமித்ஷா குற்றஞ்சாட்டினார்.
மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்து நேற்று பிற்பகல் 2 மணிக்கு விவாதம் தொடங்கியது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விளக்கத்தை தொடர்ந்து இன்று 2வது நாளாக அவையின் உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்று பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை மூலம் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டதாக அமித்ஷா மக்களவையில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் பல்வேறு கேள்விகளுக்கு அமித்ஷா மக்களவையில் இன்று பதில் அளித்து பேசியதாவது:–
பஹல்காமில் அப்பாவி மக்கள் தங்கள் குடும்பத்தினர் முன்னிலையில், அவர்களின் மதத்தின் அடிப்படையில் கொல்லப்பட்டனர். இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை நான் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
3 பயங்கரவாதிகள்
சுட்டுக்கொலை
இந்திய ராணுவம், சிஆர்பிஎப் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து மேற்கொண்ட ‘ஆபரேஷன் மகாதேவ்’ என்ற கூட்டு நடவடிக்கை நேற்று நடைபெற்றது. இதில், சுலைமான், ஆப்கான் மற்றும் ஜிப்ரான் ஆகிய பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு உதவி செய்தவர்களை ஏற்கெனவே என்ஐஏ கைது செய்துள்ளனர். இந்த நிலையில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல் ஸ்ரீநகர் கொண்டுவரப்பட்டு, என்ஐஏ காவலில் உள்ளவர்கள் அடையாளத்தை உறுதி செய்தனர்.
பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஒரு எம் 9, இரண்டு ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு உணவு வழங்கியவர்கள் தடுப்புக் காவலில் உள்ளனர். இவர்கள்தான் பயங்கரவாதிகளின் உடல்களை அடையாளம் காட்டினார்கள்.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் மூலம் அவர்களின் தோட்டாக்கள் குறித்த அறிக்கை ஏற்கனவே தயாராக இருந்தது. நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளை பரிசோதனை செய்ததில், தோட்டாக்கள் குறித்த அறிக்கை பொருந்தி இருக்கிறது. இது தொடர்பாக சண்டிகரில் மேலும் ஒரு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகே, இறந்தவர்கள் மூவரும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்திய ராணுவத்துக்கு பாராட்டு
இதற்காக அவை மற்றும் நாட்டு மக்கள் சார்பாக இந்திய ராணுவம், சிஆர்பிஎப் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.
பயங்கரவாதிகளை அனுப்பியவர்களை ஆபரேஷன் சிந்தூர் கொன்றது, தாக்குதல் நடத்தியவர்களை ஆபரேஷன் மகாதேவ் கொன்றது. ஆபரேஷன் சிந்தூர் போலவே, ஆபரேஷன் மகாதேவும் முழு வெற்றி அடைந்தது.
இதை கேட்டவுடன் எதிர்க்கட்சியினரும் மகிழ்ச்சி அடைவார்கள் என நினைத்தேன். 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா? இது என்ன மாதிரியான அரசியல்? மாறாக அவர்கள் அனைவரும் சோகம் அடைந்துள்ளனர். நீங்கள் பாகிஸ்தான் உடன் பேசி கொண்டு இருக்கிறீர்களா?
3 ஆயிரம் மணி நேரம் விசாரணை
திருமணமான 6 நாட்களில் கணவனை இழந்த பெண்ணின் வலியை நான் நேரில் உணர்ந்தேன். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக 3 ஆயிரம் மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
பயங்கரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள், இதற்கு யார் பொறுப்பு? என்று முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் நேற்று கேள்வி எழுப்பினார். நாங்கள் ஆட்சியில் இருப்பதால் அது எங்கள் பொறுப்புதான்.
மேலும், பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்ததற்கு என்ன ஆதாரம் இருக்கிறது எனக் கேட்டார்? பாகிஸ்தானைக் காப்பாற்றுவதன் மூலம் அவருக்கு என்ன கிடைக்கப் போகிறது என அவரிடம் கேட்க விரும்புகிறேன். அவர் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் வழங்க விரும்புகிறார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராஜ்நாத் சிங் தெளிவாக விளக்கிவிட்டார்.
பாகிஸ்தானுக்குள் சென்று
அழித்தோம்
22 நிமிடங்களில் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தோம். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.
பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. பயணித்து அவர்கள் நிலத்திலேயே பயங்கரவாதிகளை அழித்தோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையது தான்.
மோடி அரசு மன்மோகன் அரசைப் போல் வேடிக்கை பார்க்காது. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். காங்கிரஸ் ஆட்சியால் அழிக்க முடியாத பயங்கரவாதிகளை நாங்கள் அழித்தோம். பாகிஸ்தான், பயங்கரவாதிகளுக்கு ஊக்கம் தருகிறது என்பதை உலகிற்கு அம்பலப்படுத்தி உள்ளோம். பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க முப்படை கூட்டத்தில் பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
பாகிஸ்தானில் அனைத்து பயங்கரவாதிகள் முகாம்களையும் அழித்துவிட்டோம். பாகிஸ்தான் கெஞ்சியதன் பேரில், போரை நிறுத்த இந்தியா தான் முடிவு செய்தது. நேருவின் போர் நிறுத்தத்தால் தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது. சிம்லா ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பெற்று இருந்தால் பிரச்சினை வந்திருக்காது.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
![]()





