2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி என பதிவாகியது. அதற்கு பின் கடந்த 15 ஆண்டுகளாக, இந்தியாவின் மக்கள், வாழ்வியல், சமூக மாற்றங்கள் குறித்து நாம் நம்பி வரும் தரவுகள் அனைத்தும் மதிப்பீடுகளே. தற்போது உலகளாவிய கணிப்புகளின்படி இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடியை கடந்துவிட்டதாக கூறப்படுகிறது; சீனாவையும் முந்தியுள்ளது. ஆனால், இதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு இல்லை. 2021-ல் நடைபெற வேண்டிய கணக்கெடுப்பு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டதன் விளைவே, இன்று இந்தியா ஒரு ‘பழைய தரவுகளின்’ அடிப்படையில் இயங்கும் நாடாக மாறியுள்ளது.
இந்த சூழலில், 2025-26 நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) முன்கணிப்பை, தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட அதே நாளில், 2026 ஏப்ரல் 1 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. பொருளாதார வளர்ச்சி என்பது செல்வம் குறித்து பேசும் போது, மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது அந்த வளர்ச்சியின் பயனாளிகளான மக்களைப் பற்றியது. ஜனநாயகத்தின் இலக்கு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதால், மக்கள் யார், எங்கே, எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.
1872-ல் தொடங்கிய பத்தாண்டு மக்கள் கணக்கெடுப்பு தொடரின் 16-ஆவது கட்டமாக அமையவுள்ள Census 2027, கிராமம், நகரம், வார்டு என்ற அடித்தள அளவிலான முதன்மை தரவுகளை வழங்கும் மிகப்பெரிய ஆதாரமாக இருக்கும். வீடமைப்பு, கல்வியறிவு, மொழி, மதம், தொழில், இடப்பெயர்வு, பிறப்பு விகிதம் உள்ளிட்ட பல பரிமாணங்களில் கிடைக்கும் இத்தகவல்கள், திட்டமிடல், கொள்கை வடிவமைப்பு, நலத்திட்ட செயல்பாடு ஆகிய அனைத்திற்கும் அடிப்படையாக அமையும்.
இந்த கணக்கெடுப்பு இன்னொரு முக்கிய திருப்பத்தையும் கொண்டுள்ளது. இது இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு. சுமார் 30 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் மொபைல் செயலிகள் மூலம் தரவைச் சேகரிக்க உள்ளனர். தன்னார்வ சுய-பதிவேடு செய்யும் வசதியும் வழங்கப்பட உள்ளது. மேலும், 1931-க்குப் பிறகு முதன்முறையாக சாதி விவரங்கள் டிஜிட்டல் முறையில் பதிவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சமூக நீதி, ஒதுக்கீடு, நலத்திட்ட விவாதங்களில் புதிய தரவுச் சூழலை உருவாக்கும்.
மொபைல் செயலியில் பதிவு:
கணக்கெடுப்பாளர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களைச் சேகரிக்கும் போது, பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்ட காகிதப் படிவங்களுக்குப் பதிலாக, மொபைல் செயலியில் நேரடியாக விவரங்களைப் பதிவு செய்வார்கள். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, வயது, பாலினம், கல்வித் தகுதி, தொழில், வீடமைப்பு நிலை, குடிநீர், கழிப்பிடம், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் டிஜிட்டல் வடிவில் உடனுக்குடன் பதிவு செய்யப்படும்.
இந்த கணக்கெடுப்பின் இன்னொரு சிறப்பு, சுய-கணக்கெடுப்பு (Self-enumeration) வசதி. வீடு-வீடாகக் கணக்கெடுப்பு தொடங்குவதற்கு முன், சுமார் 15 நாட்கள் கால அவகாசத்தில், குடிமக்கள் தாங்களே ஆன்லைன் மூலம் தங்கள் விவரங்களைப் பதிவு செய்ய முடியும். இதற்காக அரசு தனியான இணையதளம் அல்லது செயலியை வழங்கும். பின்னர், கணக்கெடுப்பாளர் அந்த தகவல்களை சரிபார்த்து உறுதிப்படுத்துவார்.
தகவல்களின் துல்லியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய, செயலியில் GPS அடையாளம், நேர முத்திரை (time stamp) போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் சேர்க்கப்படும். இதனால் போலித் தகவல்கள், இரட்டைப் பதிவுகள் போன்றவை தவிர்க்கப்படுவதுடன், எந்த பகுதியில் கணக்கெடுப்பு நடந்துள்ளது என்பதும் தெளிவாகப் பதிவாகும்.
சேகரிக்கப்பட்ட தரவுகள் மைய அரசின் பாதுகாப்பான சர்வர்களில் சேமிக்கப்படும். தகவல் பாதுகாப்பு விதிமுறைகளுக்கிணங்க, தனிநபர் விவரங்கள் ரகசியமாகக் கையாளப்படும்; பொதுமக்களுக்கு வெளியிடப்படுவது ஒருங்கிணைந்த புள்ளிவிவரங்களாக மட்டுமே இருக்கும்.
மொத்தத்தில், இந்த டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு, வேகம், துல்லியம், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை ஒருங்கே கொண்டுவரும் முயற்சியாகும். காகிதம் சார்ந்த தாமதங்கள் குறைந்து, தரவு விரைவாக பகுப்பாய்வுக்கு கிடைப்பதால், கொள்கை முடிவுகள் உண்மையான சமூக நிலவரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமையும்.
தண்டிக்கப்பட கூடாது:
அதே நேரத்தில், Census 2027-ன் தரவுகள் தொகுதி மறுவரையறை (Delimitation) செயல்முறைக்கும் அடிப்படையாக அமையும். 1971-ஆம் ஆண்டு கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு இன்று வரை தொடரும் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு, பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கோட்பாடுகளுக்கே சவாலாக உள்ளது. ஒரு தென்னிந்திய எம்.பி. பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் எண்ணிக்கை, வட இந்திய மாநிலங்களின் எம்.பி.க்களைவிட குறைவாக இருப்பது இதன் நேரடி விளைவு. அதே நேரத்தில், மக்கள் கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்ற வாதமும் புறக்கணிக்க முடியாதது.
இதனால், Census 2027 ஒரு இரட்டை விளைவுடைய முயற்சியாகத் தோன்றுகிறது. ஒரு புறம், 2011-க்கு பிறகான சமூக உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து, இந்தியாவை புதுப்பிக்கப்பட்ட தரவுகளுடன் நிர்வகிக்க உதவும். மறுபுறம், பிராந்திய அதிகார சமநிலை மற்றும் சாதி சார்ந்த அரசியல் விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தும் சாத்தியமும் உள்ளது.
எதுவாக இருந்தாலும், 2026-27 ஆண்டுகள் இந்தியாவின் சமூகக் கண்ணாடியை புதுப்பிக்கும் காலமாக அமைய வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது வெறும் எண்ணிக்கை அல்ல; அது ஒரு நாட்டின் தற்போதைய யதார்த்தத்தை பதிவு செய்யும் ஜனநாயக ஆவணம். 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா தன்னைத் தானே சரியாக அறிந்து கொள்ளும் தருணம் இதுவாக இருக்க வேண்டும்.
![]()





