செய்திகள்

பயிர் விளைச்சலில் சாதனை: 34 விவசாயிகளுக்கு விருது

Makkal Kural Official

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்

சென்னை, டிச.17–

மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெற்ற 31 விவசாயிகள் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது போட்டிகளில் வெற்றி பெற்ற 3 விவசாயிகளுக்கு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விருதுகள் வழங்கினார்

பல்வேறு இயற்கை இடர்பாடுகளுக்கு இடையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தொடர் மற்றும் சீரிய முயற்சிகளின் காரணமாக இருபோக சாகுபடி பரப்பு மற்றும் பாசன வசதி பெறும் பரப்பானது கணிசமாக உயர்ந்து வருவதுடன் புதிய தொழில்நுட்பங்கள் வாயிலாக மகசூலும் அதிகரித்து வருகிறது.

உற்பத்தியை பெருக்குவதற்கான திட்டங்கள் மட்டுமல்லாது விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பயிர் விளைச்சல் போட்டிகள் வாயிலாக அதிக விளைச்சலுக்கான விருதுகள், நம்மாழ்வார் விருதுகள், திருந்திய நெல் சாகுபடிக்கான சி.நாராயணசாமி நாயுடு விருது போன்ற பல்வேறு விருதுகளை தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு வழங்கி கௌரவித்து வருகிறது.

2024–-25–ம் ஆண்டில் கேழ்வரகு பயிரில் முதல் பரிசு பெற்ற சேலம் மாவட்டம் தெத்திகிரிப்பட்டி க.தங்கமணி, நிலக்கடலை பயிரில் முதல் பரிசு பெற்ற காஞ்சிபுரம் மாவட்டம் நத்தாநல்லூர் கிராமம் த.சுதாகர் ஆகியோருக்கு முதலமைச்சர் நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற வேளாண் வணிக திருவிழாவில் வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக, 2024–-25 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, எள், கரும்பு ஆகிய பயிர்களில் அதிக விளைச்சல் பெற்ற 31 விவசாயிகள் மற்றும் பாரம்பரிய நெல் இரகங்களில் அதிக விளைச்சல் பெற்ற 3 விவசாயிகளுக்கு அமைச்சர் விருதுகள் வழங்கினார்.

ஒவ்வொரு பயிரிலும் அதிக விளைச்சல் பெற்ற முதல் 3 விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.2.50 லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசாக 1.50 லட்சம் ரூபாய் மற்றும் மூன்றாம் பரிசாக 1 லட்சம் ரூபாய் என மொத்தம் 34 விவசாயிகளுக்கு ரூ.55 லட்சம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் வ.தட்சிணாமூர்த்தி, வணிகத்துறை ஆணையர் க.ஆபிரகாம், வேளாண்மைத்துறை இயக்குநர் பா.முருகேஷ், தோட்டக்கலை துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்று அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *