செய்திகள்

பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு தொகை பெற்று தந்தது அ.தி.மு.க. அரசு

Makkal Kural Official

திருவண்ணாமலை ஆக.17-

‘பயிர் காப்பீடு திட்டத்தில் இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு தொகை பெற்று தந்த ஒரே அரசு அ.தி.மு.க. அரசு தான்’ என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

நேற்று காலை திருவண்ணாமலையில் தனியார் தங்கும் விடுதியில் விவசாயிகள், வணிகர்கள், நெசவாளர்கள் சங்க பிரதிநிதிகள், மலைவாழ் மக்கள் பிரதிநிதிகளோடு எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

‘’விவசாயிகள் நெசவாளர்கள் நலனுக்காக கடந்த அண்ணா தி.மு.க. ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு அரசுக்கு வருவாய் முக்கியம். அது இல்லாமல் திட்டங்கள் நிறைவேற்ற முடியாது. இங்கே பேசிய பலரும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுள்ளீர்கள். அதே நேரத்தில் வரியையும் கூட்டக் கூடாது என்று சொல்லியிருக்கிறீர்கள். வரி போட வேண்டும். ஆனால் அது தாக்குப் பிடிக்கும் வகையில் இருக்க வேண்டும். தொழில் செய்பவர்களுக்கு பாதுகாப்பாக அரசு இருக்க வேண்டும். ஆனால் இன்றைய அரசு அப்படி அப்படி அல்ல.

நான் முதல்வரானபோது கடுமையான வறட்சி ஏற்பட்டது. அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கினோம். தமிழக வரலாற்றிலேயே வறட்சி நிவாரணம் வழங்கிய முதல் அரசு எங்கள் அண்ணா தி.மு.க. அரசு.

இங்கே பல்வேறு தொழில் செய்பவர்கள் வந்திருக்கிறீர்கள். நீங்கள் பல்வேறு பிரச்சினைகளை தெரிவித்துள்ளீர்கள். அனைத்தும் எங்கள் கவனத்தில் உள்ளது.

ஒரு நாட்டின் வளர்ச்சி கல்வியின் வளர்ச்சியில்தான் உள்ளது. எங்கள் ஆட்சியில் பல கல்லூரிகளைத் திறந்துள்ளோம். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட தங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். எங்கள் குழந்தைப் பருவத்தில் 5 அல்லது 6 வயதில்தான் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பார்கள். ஆனால் இன்று குழந்தை பிறந்த 3 ஆண்டுகளிலேயே எல்.கே.ஜி, யுகேஜி என்று படிக்க வைக்கிறார்கள்.

இன்றைக்கு கல்வியில் உலக அளவில் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். இதையெல்லாம் எண்ணித்தான் அண்ணா தி.மு.க. அரசு செயல்பட்டது. இங்கு நிலம் எடுப்பது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. ஒரு பக்கம் நாடு வளரும்போது வாகனங்கள் அதிகரிக்கின்றன. இன்றைக்கு 10 பஸ் ஓடினாலும், எது வேகமாக ஓடுமோ அதில்தான் ஏறுவார்கள். ரயில்களிலும் அப்படித்தான். உலகம் இன்று வேகமாக போய்க்கொண்டு இருக்கிறது. அந்த வேகத்துக்கு ஏற்ப அரசு செயல்பட்டால்தான் நாடு வளர முடியும்.

இங்கே இருப்பவர்கள் பெரும்பாலும் 50 வயதைத் தாண்டியவர்கள். நம் காலம் வேறு. இப்போது இருக்கும் காலம் வேறு. இப்போது இருக்கும் இளைஞர்களின் எண்ணம் என்ன என்பதை அறிந்து அதற்கு ஏற்ப அரசாங்கம் செயல்பட வேண்டிய சூழல் இருக்கிறது. காலத்துக்கு ஏற்றவாறு விவசாயத்திலும், தொழிலிலும் மாற்றங்களை செய்யவேண்டும்.

பயிர் காப்பீட்டு திட்டத்தில் அதிக இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு பெற்றுத்தந்த ஒரே அரசு எங்கள் அரசு. காவிரி – கோதாவரி ஆறுகளை இணைப்பதற்குத் திட்டத்தை நாங்கள் செயல்படுத்த இருந்தோம். நந்தன் கால்வாய் திட்டத்துக்கு நாங்கள் நிதி ஒதுக்கினோம். குடிமராமத்து திட்டம் மூலம் ஏரி குளங்களில் தூர்வாரினோம்.

நதி நீரை சுத்தப்படுத்த ‘நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை கொண்டுவர பாரதப் பிரதமரிடம் பேசி இந்த ஆண்டு 11,500 கோடி ரூபாய் ஒதுக்கச் செய்தோம். ஜிஎஸ்டியைப் பற்றி சொன்னார்கள். அதிமுக ஆட்சியில் ஜிஎஸ்டி கவுன்சிலில் பேசி பல வரிகளை குறைத்திருக்கிறோம். ஜிஎஸ்டி வரியில் மாற்றம் செய்யப்படும் என்று பிரதமர் கூட நேற்று அறிவித்திருக்கிறார். எந்தந்தத் தொழிலை ஜிஎஸ்டி வரி பாதிக்கிறதோ அதையெல்லாம் களைய மத்திய அரசிடம் பேசுவோம்.

சாலை விபத்துகள் அதிகம் நடப்பதாகக் கூறினார்கள். இதையெல்லாம் குறைக்கத்தான் மத்திய அரசிடம் பேசி பல மேம்பாலங்ள் கட்டும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். மாணவர்களிடம் சாலை பாதுகாப்பு விதிகளைப் பற்றி நாம் சொல்லித்தர வேண்டும். சாலை விதிகளை பின்பற்றினால்தான் விபத்துகளை குறைக்க முடியும்.

நிறைய கல்லூரிகளை திறந்தது அண்ணா தி.மு.க. அரசு தான். தி.மு.க. ஆட்சியில் 1 மருத்துவக் கல்லூரிக் கூட திறக்கப்படவில்லை. ஆனால் கடன் அதிகமாக வாங்கி இருக்கிறார்கள். அதோடு அரசின் வருவாயும் கடந்த 2021ம் ஆண்டைவிட அதிகரித்துள்ளது. ஆனால், அதை வைத்துக்கொண்டு இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே தெரியவில்லை. எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை.

ஒரு அரசு குறிப்பிட்ட அளவுதான் கடன் வாங்க வேண்டும். மத்திய அரசு நிர்ணயித்த அளவுதான் கடன் வாங்க வேண்டும். ஆனால் ஸ்டாலின் தனி பாதையில் போய்க்கொண்டு இருக்கிறார். நாட்டைப் பற்றி கவலைப்படாத அரசாக தி.மு.க. இருக்கிறது. எங்கள் ஆட்சி வந்தால் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவோம். விவசாயிகளுக்கு எளிய முறையில் கடன் வழங்குவோம்’’

இவ்வாறு எடப்பாடி பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *