செய்திகள்

பனகல் பார்க் முதல் கோடம்பாக்கம் வரையான அதி நவீன ‘மெட்ரோ’ சுரங்க ரெயில் பணி நிறைவு

Makkal Kural Official

சென்னை, ஜூலை 23–

சென்னை தி.நகர் பனகல் பார்க் முதல் கோடம்பாக்கம் வரையான அதிநவீன ‘மெட்ரோ’ சுரங்க ரெயில் பணியின் ஒரு வழி சாலை பணி இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.

சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பனகல் பார்க் முதல் கோடம்பாக்கம் வரையிலான சுமார் 2.1 கி.மீ. தூரத்திற்கான சுரங்கப்பாதை பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது வழித்தடம் 4 களங்கரைவிளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை (Lighthouse – Poonamallee Bypass) திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

மஞ்சள் வழித்தடம் (Yellow Line) என்று அழைக்கப்படும் வழித்தடம் 4 ஆனது, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீ. தூரத்திற்கு அமைகிறது. இதில் 10.1 கி.மீ. சுரங்கப்பாதையாகவும், 16 கி.மீ. உயர்மட்ட பாதையாகவும் இருக்கும். இந்த வழித்தடத்தில் மொத்தம் 30 நிலையங்கள் உள்ளன, இதில் 12 சுரங்க நிலையங்கள் அமைய உள்ளது.

‘பிரம்மாண்ட பீகாக்’ சுரங்க எந்திரம்

பனகல் பார்க் – கோடம்பாக்கம் மெட்ரோ சுரங்கப் பாதையானது, வழித்தடம் 4-ன் முக்கியமான சுரங்கப்பாதைப் பிரிவுகளில் ஒன்றாகும். இந்தப் பாதையின் 2 வது சுரங்கம் என்று அழைக்கப்படும் இந்த பாதையின் பணிக்காக “பெலிகன்” (Pelican) மற்றும் “பீகாக்” (Peacock) என்ற சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் ஒருவழி சுரங்கப்பாதையை தோண்டும் பீகாக் எந்திரம் பனகல் பார்க்கில் தொடங்கி, கோடம்பாக்கத்தை வந்தடைந்தது. அப்போது, முன்னால் இருந்த சிமெண்ட் தடுப்புகளுக்கு வெளியே தண்ணீரை பீய்ச்சி அடித்துக்கொண்டு பிரம்மாண்ட பீகாக் எந்திரம் வெளியே வந்தபோது, உயர் அதிகாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள் கைகளைத் தட்டி மகிழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த திட்டத்தின் முக்கிய பகுதியில் அமைக்கப்பட்ட மெட்ரோ சுரங்க ரெயில் திட்டத்தின் முதல் கட்ட வெற்றியை கொண்டாடும் விதமாக, கோடம்பாக்கத்தில் இன்று (புதன்) காலை விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் இந்த பணியில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட ‘மெட்ரோ’ சுரங்க ரெயில் பணி ஊழியர்களுக்கு அதிகாரிகள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்த விழாவில், சென்னை மெட்ரோ ரெயில் (CMRL) திட்டப் பணிகளின் இயக்குநர், சிஜிஎம் பிளானிங், சுரங்கப்பாதை பணிகளின் பொது மேலாளர், உயர் அதிகாரிகள், ஐடிடீ சிமெண்டேசன் நிர்வாக மேலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

இந்த திட்டப் பணிகளின் நிறைவு குறித்து உயர் அதிகாரிகள் கூறியதாவது:–

சவால்கள் மிகுந்த

குடியிருப்பு பகுதியில்…

‘‘11/2 ஆண்டுகளுக்கு முன்னர் பனகல் பார்க்கில் இறக்கப்பட்ட இந்த பிரமாண்ட மெட்ரோ ரெயில் பாதைக்கான சுரங்கம் தோண்டும் ‘பீகாக்’ எந்திரம் 2.1 கிலோ மீட்டர் சுரங்க மெட்ரோ ரெயில் பாதையை அமைத்துக்கொண்டே வந்து, இன்று 12 மணி அளவில் கோடம்பாக்கத்தை அடைந்தது. இந்த பாதையானது மிகவும் சவால் மிகுந்த குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் தோண்டப்பட்ட முதல் மெட்ரோ சுரங்கப்பாதை என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

200க்கும் மேலான பழைய கட்டிடங்கள்

மேலும் கோடம்பாக்கம் மின்சார ரெயில் வழித்தடத்துக்கு அடியில் இந்தப் பாதை அமைந்து வருகிறது. மேலும் 200 க்கும் மேலான பழமையான கட்டிடங்கள், ஒரு தேவாலயம், கோடம்பாக்கம் மேம்பாலம் என பல முக்கியமான கட்டமைப்புகளுக்கு கீழே இந்த மெட்ரோ சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இருந்த போதிலும் எந்த ஒரு கட்டடத்திலும் விரிசலோ, எந்தவிதமான பாதிப்போ ஏற்படாதவாறு இந்த சுரங்கப்பணிகள் முடிவடைந்துள்ளதை மிகப்பெரிய சாதனையாக கருதுகிறோம் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வழித்தடத்திலான சுரங்கப்பாதைகள் தரைமட்டத்தில் இருந்து சுமார் 18 மீட்டர் (54 அடி) முதல் 25 (75 அடி) மீட்டர் ஆழத்தில் அமைக்கப்படுகின்றன.சமீபத்திய தகவல்களின்படி, பனகல் பார்க் முதல் கோடம்பாக்கம் வரையிலான 2.1 கி.மீ. தூரத்திற்கான ஒரு வழி சுரங்கப்பாதைப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. பீகாக் சுரங்கம் தோண்டும் இயந்திரம் இந்த 2.1 கி.மீ. தூர சுரங்கப்பணிகளை முடித்துவிட்டதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இனிப்பு கொடுத்து

மகிழ்ச்சி…

மற்றொரு சுரங்கப்பாதை இயந்திரமான ‘பெலிகன்’ இதே வழித்தடத்தில் 50 மீட்டர் (150 அடி) பின்னால் பணி செய்து வருகிறது. அந்த பாதைப்பணிகள் இன்னும் 1 மாதத்தில் இதே கோடம்பாக்கத்தில் நிறைவு பெறும். அதனைத் தொடர்ந்து, இன்னும் 3 மாதத்தில் பனகல் பார்க்கில் இருந்து ‘போட் ஹவுஸ்’ வரையிலான மெட்ரோ சுரங்கப் பாதை பணிகளை தொடங்கி வைக்க உள்ளோம் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த விழாவில், இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்ட 300 க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு உயர் அதிகாரிகள் இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *