சென்னை, ஜூலை.23-
சென்னை ஐகோர்ட்டின் மரபை உறுதி செய்யும் வகையில், தலைமை நீதிபதியாக அல்லாமல், பணிவான சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பேன் என்று புதிய தலைமை நீதிபதி எம்.எம்.ஶ்ரீவத்சவா உறுதி அளித்து பேசினார்.
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக எம்.எம்.ஶ்ரீவத்சவா நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை ஐகோர்ட் சார்பில் நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சி ஐகோர்ட் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்தது. அப்போது தலைமை நீதிபதியை வரவேற்று அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் பேசினார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் பேசும்போது, ‘தமிழ்நாட்டில் வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் வக்கீல்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டதற்கு முக்கிய காரணமே தலைமை நீதிபதி எம்.எம்.ஶ்ரீவத்சவாதான். வக்கீல்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றவில்லை என்றால், ஐகோர்ட்டே விதிமுறைகளை உருவாக்கும் என்று அரசுக்கு எச்சரிக்கை செய்து உத்தரவிட்டார்.
இதனால்தான் ராஜஸ்தானில் வக்கீல் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. எனவே, தமிழ்நாட்டிலும் வக்கீல்கள் பாதுகாப்பு சட்டம் வரும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.
சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் எம்.பாஸ்கர், லா அசோசியேஷன் தலைவர் செல்வராஜ், பெண் வக்கீல்கள் சங்கத்தலைவர் ரேவதி ஆகியோர் வரவேற்று பேசினர். வக்கீல் ரேவதி பேசும்போது, ‘திறமையான பெண் வக்கீல்கள் ஏராளமானோர் இங்கு உள்ளனர். அதனால், ஐகோர்ட் நீதிபதி பதவிக்கு பெண் வக்கீல்களுக்கும் அதிக வாய்ப்பு அளிக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து தலைமை நீதிபதி பேசினார். அவர் பேசும்போது, ‘1892-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் கட்டிடத்தின் சாவியை பெற்றுக்கொண்ட அப்போதைய தலைமை நீதிபதி சர். ஆர்தர் கோலன், எந்த பாகுபாடும் இல்லாமல் நீதி நிர்வாகம் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.
அந்த மரபை உறுதி செய்யும் வகையில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக அல்லாமல் பணிவான ஒரு சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.
மக்களின் உரிமைகளை பாதுகாக்க, திறமையான வெளிப்படைத்தன்மையுடன் நீதி நிர்வாகம் நடத்தப்படும். வக்கீல்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பணியாற்றுவேன் என்பதையும் கூறிக்கொள்கிறேன்’ என்றார்.
![]()





