செய்திகள்

பணிக்கு வராமல் போராட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது

Makkal Kural Official

சென்னை, ஜன.8-

பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் கடந்த மாதம் (டிசம்பர்) 26-ந்தேதியில் இருந்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த 5-ந்தேதி முதல் பள்ளிகள் திறந்தநிலையிலும், இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை விட்டபாடில்லை. பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு எட்டப்படவில்லை. நேற்றும் தங்கள் போராட்டத்தை ஆசிரியர்கள் முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட சூழலில், ஆசிரியர்களின் இந்த போராட்டம் தொடர்பாக தொடக்கக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கைகளை கையில் எடுத்து இருக்கிறது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் நரேஷ் அனுப்பியுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-

தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் அரையாண்டு விடுமுறை முடிந்து 5-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு 3-ம் பருவ பாடப்புத்தகம், பாட நோட்டுகள் மற்றும் நலத்திட்டங்கள் உடனடியாக வழங்கப்பட்டு, அப்பாடப்புத்தகங்களை பெற்ற மாணவர்களுக்கு கற்றல்–கற்பித்தல் பணி உடனடியாக மேற்கொள்வதற்கு அப்பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியாமல் போராட்டத்தில் கலந்து கொண்டதால், மாணவர்களின் கல்வி நலன் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மாணவர்களின் கற்றல்-கற்பித்தல் மற்றும் ஒழுக்கம் குறையும் வாய்ப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

எனவே அரசு கடிதத்தில் பணிக்கு வருகை புரியாமல் போராட்டத்தில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ‘நோ ஒர்க்–நோ பே’ அடிப்படையில் ஊதியமில்லா விடுப்பாக (அதாவது சம்பளம் கிடையாது) கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.

அப்போராட்டத்தில் கலந்து கொண்டு பணிக்கு வராமல் உள்ள ஆசிரியர்களுக்கு (மருத்துவ காரணங்களால் மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் வர இயலாதவர்களை தவிர) வேறு எவ்வகையான விடுப்பும் அனுமதிக்கக் கூடாது என்றும், அத்துடன் மேற்காணும் அரசுக் கடிதத்தின் படி பணிக்கு வராத காலத்தினை ஊதியமில்லா விடுப்பாக அனுமதித்து அவர்களின் வருகைப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டதை வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) உறுதி செய்யவேண்டும்.

கடந்த 5-ந்தேதி முதல் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் விவரங்களை தேதி வாரியாக பூர்த்தி செய்து தொடக்கக் கல்வித் துறையின் மின்னஞ்சல் முகவரிக்கும் மாவட்ட கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *