சென்னை, ஆக. 31–
சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் பணி இன்று நடந்தது. பட்டினப்பாக்கம், நீலங்கரை கடற்கரையில் ராட்சத கிரேன் மூலம் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில்கள் சார்பிலும், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.
சென்னையில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைக்கும் பணி நடந்தது. பட்டினப்பாக்கம் (மெரினா), திருவான்மியூர் (நீலாங்கரை), காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய 4 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
மெரினா கடற்கரையில் மட்டும் 1,565 விநாயகர் சிலைகள் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விநாயகர் சிலைகளின் ஊர்வலத்தைத் தொடர்ந்து சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. சுமார் 16,500 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். ஊர்க்காவல் படையினர் 2,000 பேரும் கூடுதல் பணியில் ஈடுபட்டனர்.
சென்னை எழும்பூர் புதுப்பேட்டை, ராயப்பேட்டை , ஐஸ் ஹவுஸ், ஆகிய பல்வேறு முக்கிய இடங்களான இஸ்லாமியர்கள் இருக்கக்கூடிய இடங்களில் மசூதிகளிலும் கிறிஸ்துவ ஆலயங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளில் மேல் தளத்திலிருந்தும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
![]()





