சிவகாசி, ஆக.9-
சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள், அச்சக அதிபர்களுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று கலந்துரையாடினார். ஆலைக்கு சென்று பட்டாசு உற்பத்தியையும் பார்வையிட்டார்.
‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களாக விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
நேற்று காலையில் சிவகாசியில் உள்ள ஒரு மண்டபத்தில், அச்சக உரிமையாளர்கள், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், பட்டாசு உற்பத்தியாளர்கள், காலண்டர் தயாரிப்பாளர்கள் மற்றும் வணிகர் சங்கத்தினருடன் எடப்பாடி கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
’பட்டாசு தொழில் நடத்துவதில் இருக்கும் சிரமத்தையும், பிரச்சினைகளையும் சொன்னீர்கள். இந்த நெருக்கடியான சூழலிலும் பட்டாசு தொழிலில் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். வெளிநாட்டுக்கு பட்டாசு ஏற்றுமதியாகி அரசுக்கு வருமானம் வருகிறது. ஒரு சிலர் பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த காரணத்தால்தான் இந்த பிரச்சினை வெடித்தது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அரசாங்கம் குறிப்பிட்ட அளவு மட்டுமே செயல்படும் நிலை உள்ளது. இந்த வழக்கு நடக்கும்போதே இதற்கு தீர்வுகாண அண்ணா தி.மு.க. ஆட்சியில் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து பிரச்சினைகளை சொல்லி, நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வாதாட வைத்தோம்.
தீர்வு காண்போம்
இருந்தாலும் தீபாவளி காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் பட்டாசு வெடிக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு வரும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. உச்சநீதிமன்றம் மாசுக் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பொதுநல வழக்கை போட்டவர்களுக்கு சாதகமாகி விடுகிறது. நம் மாநிலத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவில் ஏற்படும் நிலைகளை எடுத்துச் சொல்லித்தான் இதற்கு தீர்வுகாண முடியும்.
அண்ணா தி.மு.க.வைப் பொறுத்த வரையில், எல்லா தொழிலுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். உங்கள் பிரச்சினைகளை மாநிலங்களவை உறுப்பினர்கள் மூலம் எடுத்துச் சொல்வோம். மத்திய அமைச்சர்களை சந்தித்தும் உங்கள் பிரச்சினைகளை சொல்லி உதவி செய்யத் தயாராக இருக்கிறோம்.
அண்ணா தி.மு.க. ஆட்சியில் பட்டாசு தொழில் சிறக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
அண்ணா தி.மு.க. ஆட்சி காலத்தில் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.10 கோடி செலவில் தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது. அதேபோல் மதுரை பெரிய ஆஸ்பத்திரியிலும் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் பட்டாசு தொழிலை பாதுகாக்க இ்ன்னும் என்னென்ன செய்ய முடியுமோ? அவை அனைத்தையும் செய்து தருவோம்.
சேலம் மாவட்டத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா 1000 ஏக்கரில் ரூ.1,050 கோடியில் அமைக்கப்பட்டது. 3 ஆண்டு காலம் பூட்டி இருந்தது. அதனை பலகட்ட போராட்டத்துக்கு பின்னர் தி.மு.க. அரசு திறந்து வைத்தது. ஆனால் அந்த கால்நடை பூங்கா முழுமையாக செயல்படவில்லை.
மத்திய அரசிடம் போராடி தமிழ்நாட்டில் 11 சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த அனுமதி பெறப்பட்டது. ஆனால் அந்த பணிகள் தற்போது வரை கிடப்பில் உள்ளன.
இந்த பகுதியில் உள்ள தொழில்கள் வளர்ச்சி அடைய நாங்கள் உறுதுணையாக இருப்போம். உங்கள் கோரிக்கைகளை அண்ணா தி.மு.க. எம்.பி.க்கள் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி.உதயகுமார், காமராஜ், சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் ஜான் மகேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பட்டாசு உற்பத்தியை
பார்வையிட்டார்
பின்னர் சிவகாசி அருகே ஆண்டியாபுரத்தில் செயல்படும் பட்டாசு ஆலைக்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். பட்டாசு உற்பத்தி முறை குறித்து பார்வையிட்டார். தொழிலாளர்களிடம் கலந்துரையாடினார்.
நீங்கள் இந்த தொழிலில் எத்தனை ஆண்டுகளாக இருக்கிறீர்கள்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? சொந்த வீடு இருக்கிறதா? இந்த தொழிலில் இருக்கும் கஷ்டங்கள் என்ன? என கேள்வி எழுப்பினார்.
பட்டாசு வேலை செய்யும் பெண்கள், சரவெடிக்கு தடை விதிக்கப்பட்டதால் தற்போது பாதி நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கிறது என்றனர்.
உடனே அவர்களிடம், ‘எல்லோருக்கும் தொடர்ந்து வேலை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வோம். ஏழைகளுக்கு தேவையான திட்டங்களைக் கொடுப்பதுதான் அ.தி.மு.கவின் நோக்கம்’ என்றார்.
![]()





