திருப்போரூர், டிச. 29:
பச்சைப்பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கி பேசினார்.
அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொண்டு 5 கட்டங்களில் 175 தொகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து எழுச்சிப்பயணம் மேற்கொண்டார்.
6வது கட்டமாக நேற்று திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட கேளம்பாக்கம், ராஜீவ்காந்தி ஐடி எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள இஜ்திமா திடலில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–
கள்ளக்குறிச்சி அரசு விழாவில் இந்த எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால் விட்டார். தி.மு.க. ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் முடியப்போகிறது. தி.மு.க. ஆட்சியை அகற்றுவதற்கு இன்னும் 3 அமாவாசைகள் தான் இருக்கின்றன. அண்ணா தி.மு.க. ஆட்சியில் 5% பணிகள் தான் நிறைவேற்றப்பட்டதாம்.
ஸ்டாலின் பேசிய கள்ளக்குறிச்சியே அ.தி.மு.க. ஆட்சியில் தான் உதயமானது. காஞ்சிபுரம் மக்கள் கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டை புதிய மாவட்டமாக உருவாக்கியது அ.தி.மு.க.. மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டுத் தான் நாங்கள் மக்களை சந்திக்கிறோம், அ.தி.மு.க. ஆட்சியில் 5% அல்ல, 95% வாக்குறுதிகள் நிறைவேற்றியிருக்கிறோம். ஆனால், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததில் 5% மட்டுமே நிறைவேற்றியுள்ளது.
வாக்குறுதி என்ன ஆனது?
கள்ளக்குறிச்சி மக்கள் கோரிக்கையை ஏற்று மாவட்டம் தொடங்கி புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தோம். செங்கல்பட்டுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டினோம். விவசாயிகளுக்கு ஏராளமான திட்டம் கொடுத்தோம்.
தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்துவேன் என்றார் ஸ்டாலின். அப்படி உயர்த்தினாரா? பொய். இன்று மத்திய அரசு அ.தி.மு.க. கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் 125 நாளாக உயர்த்தியிருக்கிறது. ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என்றார், அதுவும் செய்யவில்லை. 100 நாள் வேலையும் கொடுக்காத அரசு தி.மு.க. அரசு. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 125 நாள் என்பது 150 நாளாக உயர்த்தியும், சம்பளமும் உயர்த்தி வழங்கப்படும், தடையில்லாமல் வேலை வழங்கப்படும். இதுதான் அ.தி.மு.க.வின் லட்சியம்.
ஸ்டாலின் பச்சைப்பொய்
100 நாள் வேலைத்திட்டம் குறித்து ஸ்டாலின் தவறான அவதூறைப் பரப்புகிறார், திட்டம் ரத்து செய்யப்படுவதாக பச்சைப்பொய் சொல்கிறார்.
அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும். ஒரு அரசு எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக செயல்படும்.
தைப்பொங்கல் வந்தபோது 2500 ரூபாய் கொடுத்தோம். அன்று ஸ்டாலின் 5 ஆயிரம் கொடுங்கள் என்று சொன்னார். ஆனால் இந்த அரசு கடந்த முறை எதுவும் கொடுக்கவில்லை. இந்த கடைசி காலத்திலாவது மக்கள் மகிழ்ச்சி அடைவதற்கு பொங்கலுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுங்கள். ஏனென்றால், இனிமேல் தி.மு.க. ஆட்சிக்கு வரப்போவதில்லை, போவதற்கு முன்பாக கொடுத்துவிட்டுப் போங்கள்.
கொரோனா காலத்தில் அரசுக்கு வரி வருவாய், ஜிஎஸ்டிவருவாய், கலால் வருவாய் எதுவுமே இல்லை, ஒரு ரூபாய் வருவாய் இல்லாமல் விலைவாசி உயராமல் பார்த்துக்கொண்டோம், 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தோம். மின் கட்டணம், வரிகளை உயர்த்தவில்லை, குப்பை வரி போடவில்லை, மக்கள் பாதிக்காத வகையில் சிறப்பான ஆட்சி கொடுத்தோம். நிதி நெருக்கடி இல்லாமல் பார்த்துக்கொண்டோம். இன்று வருவாய் உயர்ந்துவிட்டது, கலால் வரி, பத்திரப்பதிவு எல்லாம் உயர்ந்தும் கடன் வாங்குகின்றனர். எல்லோரையும் கடன்காரனாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனை.
73 ஆண்டு கால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. 2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 5 லட்சத்து 18 ஆயிரம் கோடிதான். அதாவது கொரோனா காலத்தையும் சேர்த்து இவ்வளவுதான் கடன். ஆனால் அதைவிட திமுகவின் இந்த ஐந்தாண்டு கால கடன் சுமை அதிகம். இப்படி மக்கள் தலையில் கடன் சுமத்தும் அரசு தேவையா?
எந்த பெரிய திட்டமும் இல்லை, புதிய மாவட்டம் இல்லை, புதிய மெடிக்கல் காலேஜ் இல்லை, புதிய சட்டக்கல்லூரி இல்லை, புதிய கலைக் கல்லூரி இல்லை, புதிய பாலம் கட்டவில்லை, புதிய சாலை அமைக்கவில்லை, புதிய தடுப்பணை கட்டவில்லை, இவ்வளவும் செய்யாமல் இவ்வளவு கடன், இந்தப் பணமெல்லாம் எங்க போச்சு என்று மக்கள் கேட்கிறார்கள்.
அ.தி.மு.க. ஆட்சி இருக்கும் வரை மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தோம், அ.தி.மு.க. ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் 7,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, தலா 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது. திமுக ஆட்சியில் அதை நிறுத்திவிட்டனர்.
இப்போது கல்லூரி மாணவர்களைத் தேர்வுசெய்து, ஏனென்றால் அவர்கள் தான் ஓட்டுப் போடும் வயதுடையவர்கள். அவர்களில் 20 லட்சம் பேருக்கு கொடுப்பதாகச் சொல்லி, 10 லட்சம் பேருக்கு மட்டும் என்று அறிவித்துள்ளனர், இதுவரை லேப்டாப் வரவில்லை, இது ஒரு பச்சைப் பொய். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியில் லேப்டாப் கொடுக்கப்படும்.
ரகுபதி என்று ஒருவர் இருக்கிறார். வேஷ்டியை மாற்றிக்கொண்டு சென்றவர், அதிமுக தொண்டர் உழைத்து, அம்மா கொடுத்த அடையாளத்தை வைத்துக்கொண்டு, துரோகத்தின் வடிவமாக இருந்து, பதவி சுகம் பெற்றுக்கொண்டிருக்கும் ரகுபதி அவர்களே நாவடக்கம் தேவை,
அன்றைக்கு ஒரு எட்டப்பர், இன்றைக்கு ரகுபதி. ஆண்டவன் உங்களை மன்னிக்க மாட்டார். அதிமுக உழைப்பால், கட்சியால் ரகுபதி அடையாளம் காட்டப்பட்டார். அதிமுக ஆட்சியில் லேப்டாப் நிறுத்தப்பட்டதாகச் சொன்னது தவறு. 2019 வரை கொடுக்கப்பட்டது, 2020ல் கொரோனா தொற்று காரணமாக கொடுக்க முடியவில்லை. 2021ல் திமுக ஆட்சிக்கு வந்து நிறுத்திவிட்டனர். இதை பலமுறை சட்டமன்றத்தில் பேசினோம், நிராகரித்துவிட்டனர்.
தமிழக கிராமப்புறங்களில் 3 லட்சத்து 80 ஆயிரம் பேர், அதாவது சுமார் 41% பேர் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். 2017–18 அண்ணா தி.மு.க. ஆட்சியின்போது, இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு முன்பு வரை, நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களில் வெறும் 9 பேருக்குத்தான் மருத்துவக் கல்வியில் இடம் கிடைத்தது. நீட் தேர்வை ஒருபோதும் மாநில அரசால் ஒழிக்க முடியாது என்பதால், ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்க, அம்மா அரசு கொண்டுவந்த திட்டம் தான் 7.5% உள் இடஒதுக்கீடு. இந்த இடஒதுக்கீடு மூலம், கடந்த அண்ணா தி.மு.க. ஆட்சியில் 3 ஆயிரம் பேர் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் இலவசமாக மருத்துவம் படித்து இப்போது மருத்துவர் ஆகியிருக்கிறார்கள்.
இப்படி ஒரு திட்டமாவது தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றினார்களா? எதுவும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது புகார் பெட்டி என்று திட்டம் கொண்டு வந்து மனுவை வாங்கி பிரச்னையை தீர்ப்பேன் என்றார், தீர்த்தாரா? இதைத்தானே மனுவாக எழுதி போட்டாங்க. செஞ்சாரா?
ஆற்றில் விடப்பட்ட மனுக்கள்
இப்போது உங்களுடன் ஸ்டாலின் என்று நான்காண்டு கழித்து மக்களிடம் வந்திருக்கிறார். வீடு வீடாக அதிகாரிகள் வருகிறார்கள். மக்களிடம் இருக்கும் 46 பிரச்சினைகள் பற்றி மனு கொடுத்தால் அதனை நிறைவேற்றிக் கொடுப்பார்களாம். இன்னும் சில மாதத்தில் ஆட்சி முடியப்போகிறது. அதற்குள் நிறைவேற்ற முடியுமா? எப்படி ஏமாற்றுகிறார் என்று பாருங்கள், ஏற்கனவே வாங்கிய மனுக்கள் என்னாச்சு? ஆற்றில் போட்டுவிட்டனர், டீ கடையில் போண்டா விற்பதற்கு மனுவை பயன்படுத்துகிறார்கள்.
மீன்பிடி தடைக் காலத்தில் 5 ஆயிரம் ரூபாய் நிதி உயர்த்தி கொடுத்தோம். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியில் இந்த நிதி உயர்த்தி வழங்கப்படும்.
மீனவர்களுக்கு தூண்டில் வளைவு, மீன்பிடித் துறைமுகம் அமைத்தோம். இறங்குதளம் அமைத்தோம், டீசல் மானியம் கொடுத்தோம். ஆதிதிராவிடர் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மீனவர்களுக்கும் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.
தமிழ் நாட்டில் உள்ள 3 ஆயிரம் ஜல்லி கிரஷர்களை மிரட்டி பணம் பறிக்கிறார்கள். ஒரு ஏக்கர் கிரஷருக்கு 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறுகிறார்கள். 600 கோடி ரூபாய் கொள்ளையடிக்க இந்த அரசு துணிந்துவிட்டது. இதை நாங்கள் சும்மா வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம், மக்களும் பொறுக்க மாட்டார்கள். அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இதில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த மாவட்டம் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததற்கு எடுத்துக்காட்டு. பிரதமரும், சீன அதிபரும் மாமல்லபுரத்தை தேர்வுசெய்து, வந்து பேசினார்கள். சட்டம் ஒழுங்கு சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டதால் தான், இங்கு வந்து பேசினார்கள். அந்த காலகட்டத்தில் உலகளவில் இந்த சந்திப்பு கவனம் பெற்றதற்கு அ.தி.மு.க. ஆட்சிதான் காரணம்.
செங்கல்பட்டு புதிய மாவட்டம், 125 கோடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை, திருபோரூர் பேரூராட்சியில் 54 கோடியில் பாதாளச் சாக்கடை திட்டம், கோவளம் ஊராட்சியில் 19 கோடியில் தூண்டில் வளைவு, கூட்டுக்குடிநீர் திட்டம், அரசு சட்டக்கல்லூரி, நெய்மேலி கலைக்கல்லூரி, திருப்போரூர் முருகன் கோயிலில் 6 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி, முருகன் கோயில் முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை சாலை மற்றும் இணைப்புப் பாலம் கட்டப்பட்டது, இப்படி பல திட்டங்கள் கொடுத்தோம்.
நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருக்கலாம், மக்கள் பிரச்னையை தீர்க்கும் கட்சி அதிமுக மட்டும்தான். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
முன்னதாக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் 2 அடி உயர பெருமாள் சிலையை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி ஆசி பெற்றார். இவரை தொடர்ந்து மாநில மகளிர் அணி இணைச் செயலாளரும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளரும், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான மரகதம் குமரவேல் 2 அடி முருகன் சிலையை வழங்கினார். முன்னாள் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் கட்சியின் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளருமான தண்டரை கே. மனோகரன் எடப்பாடிக்கு செங்கோல் வழங்கினார்கள். நாடாளுமன்ற குழு உறுப்பினர் எம். தனபால் இரண்டடி உயர முருகன் திருவுருவ சிலையை எடப்பாடிக்கு வழங்கினார்.

முன்னதாக தையூர் ஊராட்சியில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் வகையில் திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளரும் தையூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவருமான தையூர் எஸ். குமரவேல் ஏற்பாட்டில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஓஎம்ஆர் சாலையில் எடப்பாடி பழனிசாமிக்கு பூ மழை பொழிந்து பூரண கும்பம் மரியாதை வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
எழுச்சி பயண பொதுக்கூட்டத்தில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நாவலூர் முத்து, கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் செல்லப்பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர்கள் மாமல்லபுரம் எ.எஸ்வந்த்ராவ், மஞ்சுளா ரவிக்குமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் வி.வேலாயுதம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் வி. பக்தவச்சலம், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பையனூர் ஆர்.கே.குமார்,
மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர்கள் பாலமுருகன், பவழகன், கல்பனா தேவி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் தையூர் எஸ் குமரவேல், குட்டி என்கிற நந்தகுமார், மாமல்லபுரம் ஜி.ராகவன், கே.ஆர்.செல்வம், எ.விஜயரங்கன், வி.கார்த்திகேயன், வி.ஜி.குமரன், பெரும்பாக்கம் சி.விவேகானந்தன், மாமல்லபுரம் நகரக் கழக செயலாளர் எ.கணேசன், பேரூர் கழக செயலாளர்கள் சிவராமன் மாமல்லபுரம் நகர மன்ற தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், திருப்போரூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திருவிடந்தை குட்டி (எ)நந்தகுமார்,
திருப்போரூர் தெற்கு ஒன்றிய கழக இளைஞரணி செயலாளரும் தண்டலம் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவருமான தண்டலம் எம். ஆனந்தன், திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக இளைஞர் அணி செயலாளர் கேளம்பாக்கம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான கேளம்பாக்கம் எஸ்.ஆர்.எஸ். வினோத்கண்ணன், கேளம்பாக்கம் கிளை நிர்வாகி ஏபிஎன்டி பிரவீன்குமார் , இள்ளலூர் ஊராட்சி கிளை நிர்வாகி ஈச்சங்காடு சொ. சதாசிவம்,
பெருந்தண்டலம் ஊராட்சி மன்ற தலைவரும் ஊராட்சி நிர்வாகியுமான ரெட்டிக்குப்பம் எம். செல்வம் , தையூர் ஊராட்சி கிளைக் கழகத்தை சேர்ந்த தையூர். எம் ராஜா , செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவையின் இணைச் செயலாளரும் முன்னாள் முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவரும் ஏகாட்டூர் கிளைக் கழக செயலாளருமான லயன் டாக்டர். எம்.எஸ்.பாஸ்கரன்,
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட வர்த்தக அணியின் மாவட்ட இணை செயலாளர் ஏகாட்டூர் எஸ். ரமேஷ், திருப்போரூர் நகர வார்டு செயலாளர் திருப்போரூர் பி.முருகவேல், வடக்கு ஒன்றிய கழக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளரும் கேளம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினருமான திவ்யா வினோத்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பூங்கா நகர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் தையூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் தையூர் எஸ்.குமரவேல் ஆகியோர் ஒருங்கிணைத்து செய்திருந்தார்.
![]()





