செய்திகள்

நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கினார் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ

Makkal Kural Official

வாஷிங்டன், ஜன. 17–

தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித்தலைவர் மச்சாடோ, சரியான நேரத்தில் அதிபராக தேர்ந்தெடுப்பேன் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோ (வயது 58) இரும்பு பெண்மணி என அறியப்படுகிறார். அவர் அங்கு ஜனநாயக உரிமையை மீட்டெடுக்க 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார். இதனிடையே கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்போதே அந்தப் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்த அவர், தனது நோபல் பரிசை டிரம்ப்புக்கு வழங்கினார். இதனைத்தொடர்ந்து வெள்ளை மாளிகைக்கு வெளியே பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், “டிரம்ப்பின் வசம் அமைதிக்கான நோபல் பரிசை நான் வழங்கினேன். இது எங்கள் தேசத்தின் சுதந்திரத்துக்காக அவரது தனித்துவ அர்ப்பணிப்பிற்கான அங்கீகாரம்” என்று கூறினார். இந்த சூழலில் டிரம்ப் நோபல் பரிசை தனக்கு வழங்கிய மச்சாடோவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில், “மரியா கொரினா மச்சாடோ அற்புதமானவர். பல்வேறு சவால்களை கடந்து வந்துள்ளார். அவர் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசை நான் மேற்கொண்ட பணிக்காக எனக்கு வழங்கினார். இது ஒரு பரஸ்பர மரியாதையின் மீதான அற்புத செயலாகும். மரியாவுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

நோபல் பரிசு பெற்றவர்களே

பட்டியலில் தொடர்வர்

இதனிடையே நோபல் குழு வெளியிட்டிருந்த அறிக்கையில், பதக்கம் அல்லது பரிசுத் தொகையை என்ன செய்தாலும், பரிசைப் பெறுபவராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டவரே, நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியலில் தொடர்ந்து இருக்கிறார்.

ஒரு பரிசு பெற்றவர் என்ன செய்யலாம் என்பது குறித்து நோபல் அறக்கட்டளையின் சட்டங்களில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. இதன் பொருள், பரிசு பெற்றவர் இந்தப் பொருட்களை வைத்திருக்க, கொடுக்க, விற்க அல்லது நன்கொடை அளிக்க சுதந்திரம் இருக்கிறது.

அமைதிக்கான நோபல் பரிசை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ, அறிவிக்கப்பட்டவுடன் மாற்றவோ அல்லது எந்த நிலையிலும் ரத்து செய்யவோ முடியாது. இந்த முடிவு இறுதியானது மற்றும் எல்லா காலத்திற்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபராக தேர்ந்தெடுப்பேன்

இதனிடையே மச்சாடோ கூறுகையில், எனக்கு அதிகமான மக்கள் ஆதரவு இருக்கிறது. வெனிசுலாவை மாற்றுவதாக சபதம் செய்து உள்ளேன். சரியான நேரத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன். வெனிசுலா மக்களுக்காக சேவை செய்ய தயாராக இருக்கிறேன். நிக்கோலஸ் மதுரோவின் வெளியேற்றத்திற்குப் பிறகு அமெரிக்கா டெல்சி ரோட்ரிக்சை ஆதரித்தாலும், ஒரு நாள் வெனிசுலாவை வழிநடத்துவேன் என்றார்.

ஏற்கனவே வெனிசுலா தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக டிரம்ப் கூறி வரும் நிலையில் டிரம்பிடம் நோபல் பரிசை ஒப்படைத்த பின்னர், மச்சாடோ அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன் என தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *